ADDED : ஜன 11, 2025 12:14 AM
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில், மின் கட்டணமாக 210 கோடி ரூபாய் செலுத்த கோரி குறுந்தகவல் அனுப்பப்பட்டதால், தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்தார்.
ஹிமாச்சலின், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள பெஹெர்வின் ஜட்டன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லலித் திமான்; தொழிலதிபர்.
இவருக்கு, கடந்த டிசம்பருக்கான மின் கட்டணமாக, 210 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, மாநில மின் வாரியம் சார்பில் சமீபத்தில் குறுந்தகவல் அனுப்பப்பட்டது.
முந்தைய மாதம், 2,500 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்திய நிலையில், தற்போது 210 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற குறுந்தகவலால், தொழிலதிபர் லலித் திமான் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, மின் வாரிய அலுவலகத்துக்கு அவர் நேரில் சென்று புகார் அளித்தார். விசாரித்த அதிகாரிகள், தொழில்நுட்பக் கோளாறால் அதிக கட்டணம் வந்திருப்பதாகக் கூறினர்.
இதையடுத்து, 210 கோடி ரூபாய் என்பதை, 4,047 ரூபாய் என அதிகாரிகள் திருத்தினர்.
இதனால், லலித் திமான் நிம்மதி அடைந்தார். கணினியில் தவறான மீட்டர் ரீடிங் உள்ளிடப்பட்டதால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

