நாளை டில்லி வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்: ஆயுத கொள்முதல் குறித்து பேச திட்டம்
நாளை டில்லி வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்: ஆயுத கொள்முதல் குறித்து பேச திட்டம்
UPDATED : டிச 03, 2025 01:29 AM
ADDED : டிச 03, 2025 12:59 AM

புதுடில்லி: இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டுக்காக நாளை() டில்லி வரும் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடியை சந்தித்து, 'சுகோய் - 57' போர் விமானம், 'எஸ் - 400' வான் பாதுகாப்பு கவசம் ஆகியவற்றை வழங்குவது குறித்து பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது போர் துவங்குவதற்கு முன், 2021 டிசம்பரில் இந்தியா வந்தார். அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து நாளை டில்லி வருகிறார். இரு நாள் பயணமாக இந்தியா வரும் அவர், டில்லியில் நடக்க உள்ள, 23-வது இந்தியா- - ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பங்கேற்க உள்ளார்.
நட்பு நாடு
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்தன.
இருப்பினும் நம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. நம் நட்பு நாடான ரஷ்யா மிக அதிக தள்ளுபடி விலையில் கச் சா எண்ணெய் வழங்கியது.
நம் ராணுவத்திலும் ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது ரஷ்யாவின் எஸ் - 400 வான் பாதுகாப்பு கவசம் முக்கிய பங்காற்றியது. இந்த சூழலில் ரஷ்ய அதிபர் இந்தியா வருகிறார்.
அவரது பயணம் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் நேற்று கூறியதாவது:
இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில், 'சுகோய் - 57' எனப்படும், ஐந்தாம் தலைமுறை போர் விமானம் மற்றும் 'எஸ் - -400' வான் பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட ராணுவ உப கரணங்களை, கூடுதலாக இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்தப்படும்.
தொழில்நுட்ப பகிர்வு
ரஷ்ய தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராக உள்ளோம். விரைவில் சில தளவாடங்களின் கூட்டு உற்பத்தியையும் துவக்க உள்ளோம். சிறு மற்றும் நடுத்தர அளவிலான அணு உலைகள் அமைக்கும் தொழில்நுட்பத்தில் ரஷ்யாவுக்கு வலுவான அனுபவம் உள்ளது. அந்த தொழில்நுட்பமும் இந்தியாவுடன் பகிரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ரஷ்ய அதிபரின் இந்திய பயணத்தை ஒட்டி, இந்தியா - ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி 18ல் கையெழுத்தான. 'ரெலோஸ்' எனப்படும், தளவாடங்கள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு, அந்நாட்டு பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் வழங்கியது.
இந்த ஒப்பந்தம், இருதரப்பும் தங்கள் போர் கப்பல்கள், விமானங்கள், தளவாட அமைப்புகளை பரஸ் பரம் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது. இது இரு நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

