30 ஆண்டு இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் மஹாராஷ்டிரா அமைச்சருக்கு செஷன்ஸ் கோர்ட் 2 ஆண்டு சிறை
30 ஆண்டு இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் மஹாராஷ்டிரா அமைச்சருக்கு செஷன்ஸ் கோர்ட் 2 ஆண்டு சிறை
ADDED : பிப் 20, 2025 06:41 PM

நாசிக்: போலி ஆவணங்கள் மூலம் மனை (பிளாட் ) ஒதுக்கீடு பெற்றதாக 30 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் மஹாராஷ்டிரா அமைச்சருக்கு செஷன்ஸ் கோர்ட் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணியில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்.,கட்சியைச் சேர்ந்த மாணிக்ராவ் கோகாடே விவசாயத்துறை அமைச்சராக உள்ளார்.
கடந்த 1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வரின் விருப்புரிமையின் கீழ் குறைந்த வருவாய் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சலுகையை பெற போலி ஆணங்களை சமர்பித்து நாசிக் மாவட்டம் யோலகர்மாலா என்ற இடத்தில் இரு பிளாட்டுகள் வாங்கியுள்ளார். இது குறித்து சர்கார்வாடா காவல் நிலையில் புகார் அளிக்கப்பட்டது.
வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 30 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்தது. இதில் அமைச்சர் மாணிக்ராவ் கோகாடே, சகோதரர் சுனில் கோகாடே ஆகியோர் பிளாட் வாங்கியதில் குற்றம் நிரூபணம் ஆனது.
இதையடுத்து இருவருக்கும் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சர் மாணிக்ராவ் கோகாடே கூறுகையில், செஷன்ஸ் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளதாகவும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த தனஞ்ஜெய் முண்டே என்ற மற்றொரு அமைச்சர் கடந்தாண்டு டிசம்பரில் குற்றவழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.

