ஓட்டுகளை திருடுவது தேச விரோதம்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு
ஓட்டுகளை திருடுவது தேச விரோதம்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு
ADDED : டிச 10, 2025 12:43 AM

புதுடில்லி: ''ஓட்டுகளை திருடுவது தேசத்துக்கு விரோதமானது. இந்த குற்றத்தை தான், மத்தியில் ஆளும் பா.ஜ., செய்து வருகிறது. தேர்தல் கமிஷனை கைப்பற்றி, நாட்டின் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கிறது,'' என, காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.
லோக்சபாவில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று பேசியதாவது:
ஓட்டு திருட்டு தேச விரோதமானது; ஆனால் இந்த குற்றத்தை செய்து தான், பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது. சுதந்திரமாக, நடுநிலையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் கமிஷனை மிரட்டி, தங்கள் கட்டுப்பாட்டில் அக்கட்சி வைத்துள்ளது. அதன் மூலம் ஓட்டு திருட்டில் ஈடுபடுகிறது.
ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு தேர்தல் கமிஷனும் துணை போகிறது. தேர்தல் கமிஷனை கைப்பற்றி, நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ., சீர்குலைக்கிறது. தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? அதற்கான நோக்கம் என்ன?
அந்த குழுவில் எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. 2023 டிசம்பரில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, எந்தவொரு தேர்தல் கமிஷனரையும் பதவியில் இருக்கும் போது தண்டிக்க முடியாது. யாரை திருப்திப்படுத்த இந்த சட்டம்? ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை தேர்தல் முடிந்த, 45 நாட்களில் அழிக்க உத்தரவிட்டது ஏன்?
மக்கள் சக்தி மற்றும் சமத்துவத்தை மஹாத்மா காந்தி வலியுறுத்தினார். ஆனால் பா.ஜ.,வின் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்., சமத்துவத்தை எதிர்க்கிறது. அனைவரும் சமம் என்பதை அந்த அமைப்பு எதிர்க்கிறது. தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என, அந்த அமைப்பு நினைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

