எடியூரப்பா மீது 'போக்சோ' வழக்கு: சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
எடியூரப்பா மீது 'போக்சோ' வழக்கு: சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
ADDED : டிச 03, 2025 12:31 AM

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான, 'போக்சோ' வழக்கு விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடக பா.ஜ., மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 82. பெங்களூரில் உள்ள தன் இல்லத்துக்கு உதவி கேட்டு, தாயுடன் வந்த, 17 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, இவர் மீது சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில், 'போக்சோ' வழக்கு பதிவானது. பின், இவ்வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கை ரத்து செய்யும்படி, எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், வழக்கில் புதிதாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி அருண், எடியூரப்பா வழக்கில் விசாரணையை தொடர நவ., 13ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எடியூரப்பா மேல்முறையீடு செய்தார். இம்மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
எடியூரப்பா தரப்பு வக்கீல் சித்தார்த்த லுாத்ரா வாதிடுகையில், ''பாலியல் குற்றம் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதை உயர் நீதிமன்றம் புறக்கணித்துள்ளது.
''என் மனுதாரர், 82 வயது முதியவர். நான்கு முறை முதல்வராக இருந்தவர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் மீது இத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். அத்துடன், சி.ஐ.டி., மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
- நமது நிருபர் -

