குவியும் எஸ்.ஐ.ஆர்., மனுக்களால் சுப்ரீம் கோர்ட் வேதனை! அரசியல்வாதிகள் விளம்பரம் தேடுவதாக விமர்சனம்
குவியும் எஸ்.ஐ.ஆர்., மனுக்களால் சுப்ரீம் கோர்ட் வேதனை! அரசியல்வாதிகள் விளம்பரம் தேடுவதாக விமர்சனம்
ADDED : டிச 10, 2025 01:24 AM

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக, மாநில அரசுகள் வரிசையாக மனுக்களை தாக்கல் செய்வது வேதனை அளிப்பதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில், அரசியல் கட்சிகள் விளம்பரம் தேடுவதாகவும் விமர்சித்துள்ளது. பீஹாரில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், அங்கு முன்னதாக எஸ்.ஐ.ஆர்., பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, 'இண்டி' கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இருந்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
காலக்கெடு
எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடக்கும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மனுக்களை அரசியல் கட்சியினர், தனி நபர்கள் மற்றும் சமூக அமைப்பினர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் என்பதால், எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்' என, வாதாடினார்.
தமிழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்காக ஆஜரான வழக்கறிஞர், 'தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் பணி நிமித்தமாக வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை விடுமுறை வருவதால், பலர் வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது.
''இதனால், எஸ்.ஐ.ஆர்., பணியின் கா லக்கெடுவை நீட்டிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, கோரினார்.
அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்து வருவது விரக்தி அளிக்கிறது. தனி நபரோ, அரசியல் கட்சியினரோ, விளம்பரம் தேட இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணை
பெரும்பாலானோர் தாக்கல் செய்த மனுக்களில், தனித்துவமான பிரச்னை இருப்பது தெரிகிறது. இந்த விவகாரத்தை, அனைவரும் தீவிர அரசியலாக்க முயல்கின்றனர். மேலும் மேலும், மனுக்களை தாக்கல் செய்து, இந்த விவகாரத்தை அரசியலாக்கி கொண்டே இருங்கள். தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால், எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் மாநில வாரியாக விசாரணை நடத்த அமர்வு முடிவு செய்துள்ளது.
இந்த விஷயத்தில், பீஹார் தொடர்புடைய வழக்குகளை முதலில் விசாரித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, மற்ற மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகள் மீது உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இங்கு, தேர்தல் அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்ட சம்பவங்கள் கவலை அளிக்கிறது. இதுபோன்ற, அராஜக செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த மனு குறித்து மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாம், எஸ்.ஐ.ஆர்., நடைமுறையில் இருந்து விடுபட்டது ஏன் என்பது குறித்தும் பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். கேரளாவில், எஸ்.ஐ.ஆர்., நடைமுறைகளை மேலும் நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 18ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, மாநில அரசுகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -

