மண்ணில் புதைந்திருந்த கோவில் சீரமைக்க கிராமத்தினர் திட்டம்
மண்ணில் புதைந்திருந்த கோவில் சீரமைக்க கிராமத்தினர் திட்டம்
ADDED : ஜன 30, 2025 09:06 PM

தட்சிணகன்னடா; மங்களூரு அருகில், மண்ணில் புதைந்திருந்த 300 ஆண்டு பழமையான கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை சீரமைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தட்சிணகன்னடா, மங்களூரு அருகில் பெதமலே கிராமம் உள்ளது. கிராமத்தில் சமீப ஆண்டுகளாக அவ்வப்போது நாகப்பாம்பு வீடுகளில் நுழைவது, தற்கொலை என, பல அசம்பாவிதங்கள் நடந்தன. நிம்மதி இழந்து தவித்ததால், பலரும் கிராமத்தை விட்டே வெளியேறினர்.
அசம்பாவிதங்கள் நடப்பதால், கலக்கமடைந்த கிராமத்தினர் புரோகிதரை வரவழைத்து பிரசன்னம் பார்த்தனர். 'குறிப்பிட்ட இடத்தில், 300 ஆண்டுகள் பழமையான கோவில் மண்ணில் புதைந்துள்ளது.
சக்தி வாய்ந்த கோவில் புதைந்து கிடப்பதால், கடவுள் கோபமடைந்து உள்ளார். இதுவே அசம்பாவிதங்கள் நடக்கின்றன. கோவிலை கண்டுபிடித்து சீரமைத்து, பூஜை, புனஸ்காரங்கள் செய்தால் சரியாகும்' என, கூறினர்.
கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில் கோவிலை தேட துவங்கினர். தனி நபருக்கு சொந்தமான காலி மனையில் தோண்டிய போது கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது உமா மஹேஸ்வரர் கோவிலாகும். 100 ஆண்டுகளுக்கு முன், வழிபாடுகள் நடந்ததற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. இது 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.
மண்ணுக்கு அடியில் மணி உட்பட, வழிபாடுகளுக்கு பயன்படுத்தும் பொருட்கள், கொடி கம்பம் இருந்தன.
கடவுள் விக்ரகங்கள் இருந்தன. கோவிலின் கலை அழகை கண்டு, கிராமத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இதை சீரமைத்து, வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளனர்.

