நீட், ஜே.இ.இ., பயிற்சி மையத்தில் மின் விசிறிகளுக்கு இரும்பு வலை; தற்கொலையை தடுக்க உத்தி
நீட், ஜே.இ.இ., பயிற்சி மையத்தில் மின் விசிறிகளுக்கு இரும்பு வலை; தற்கொலையை தடுக்க உத்தி
UPDATED : மே 04, 2026 04:35 PM
ADDED : மே 04, 2026 04:36 PM

கோட்டா:
நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிகம் உள்ள ராஜஸ்தானின் கோட்டாவில், ஒரு பயிற்சி மையத்தில் மாணவர்கள் மின்விசிறியில் தற்கொலை செய்துகொள்ள கூடாது என்பதற்காக, அதற்கு இரும்பு கம்பிகளால் ஆன வலையை பொருத்தி உள்ளனர்.
ராஜஸ்தானின் கோட்டா நம் நாட்டின் பயிற்சி மையங்களின் தலைநகராகக் கருதப்படுகிறது. இங்கு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., ஆகியவற்றில் சேர்வதற்கான ஜே.இ.இ., மற்றும் நீட் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான மாணவர்கள் மின்விசிறிகளில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை தடுக்கும் வகையில், அதிக எடை விழுந்தால் தானாகவே கழன்று கீழே விழும் 'ஸ்பிரிங்' பொருத்தப்பட்ட மின்விசிறிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது ஒரு பயிற்சி மையத்தின் விடுதியில் உள்ள மின்விசிறிகளை சுற்றி, இரும்பு கம்பிகளால் ஆன வலை வேயப்பட்டுள்ளன. இந்த படங்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
'இயந்திரத்தனமான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, மாணவர்களின் மனநலனில் அக்கறை செலுத்த வேண்டும்' என்று, இந்த நடவடிக்கைக்கு பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
