அரசு கலைக் கல்லுாரிகளில் குவியும் விண்ணப்பங்கள் வெளி மாவட்ட மாணவர்கள் ஆர்வம்
அரசு கலைக் கல்லுாரிகளில் குவியும் விண்ணப்பங்கள் வெளி மாவட்ட மாணவர்கள் ஆர்வம்
UPDATED : மே 14, 2026 06:09 PM
ADDED : மே 14, 2026 06:10 PM
திருப்பூர்:
நடப்பு கல்வியாண்டில், கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர மாணவ, மாணவியரிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
தரமான கல்வி மட்டுமன்றி, குடும்பப் பொருளாதாரச் சூழலும் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, உயர்கல்வியைத் தேர்வு செய்வதில் மாணவர்களும் பெற்றோரும் தீவிரமாக உள்ளனர்.
வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ள பாடப்பிரிவுகள் மற்றும் சிறந்த கல்லுாரிகளை தேடி அவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், அரசு கலைக்கல்லுாரிகளில் இணைய வழி விண்ணப்பப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெளிமாவட்ட மாணவர்கள் ஆர்வம் திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் சேர நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுக்கோட்டை என தொலைதுார மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான காரணங்கள் குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:
கல்லுாரி அரை நாள் மட்டுமே செயல்படுவதால், எஞ்சிய நேரத்தில் திருப்பூரின் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாணவர்கள் பகுதிநேர வேலை பார்த்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனர்.
வெளிமாவட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச விடுதி வசதி, தங்கிப் படிப்பதற்கான பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. தனியார் கல்லுாரிகளுக்கு இணையாக, அரசு கல்லுாரிகளில் சேர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காட்டும் இந்த ஆர்வம், உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
