அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நியமனத்தில் அடுத்தடுத்து மாற்றம்
அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நியமனத்தில் அடுத்தடுத்து மாற்றம்
UPDATED : ஆக 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சிவகங்கை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டதால், இரண்டாவது முறையாக புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி, செங்கல்பட்டு, தர்மபுரி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களும், புதிதாக அமைக்கப்படவுள்ள திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர் கல்லூரிகளுக்குத் தனி அலுவலர்களும் நியமித்து ஜூலை 31ம் தேதி உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவில் ஆக., 4ம் தேதியன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தர்மபுரி கல்லூரி முதல்வர் வம்சதாரா, தஞ்சாவூர் கல்லூரி முதல்வர் கனகசபை ஆகியோரது நியமனம் ரத்து செய்யப்பட்டது.
தூத்துக்குடி கல்லூரிக்கு மாற்றப்பட்ட திருச்சி கல்லூரி முதல்வர் ரவிசங்கர் தஞ்சாவூர் கல்லூரி முதல்வராகவும், பெரம்பலூர் கல்லூரி தனி அலுவலராக நியமிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன், திருச்சி கல்லூரி முதல்வராகவும் மாற்றப்பட்டனர். விழுப்புரம் கல்லூரி தனி அலுவலராக நியமிக்கப்பட்ட ஜெயந்தி, பெரம்பலூர் கல்லூரி தனி அலுவலராக மாற்றப்பட்டார்.
இதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதால், இந்த உத்தரவில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் கல்லூரி முதல்வராக ரவிசங்கர், திருச்சி கல்லூரி முதல்வராக பாலசுப்பிரமணியம் ஆகியோரது நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் கல்லூரி தனி அலுவலராக நியமிக்கப்பட்ட ஜெயந்தி, தஞ்சாவூர் கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.

