துவக்கப்பள்ளியிலும் மாணவர் தனித்திறனை மேம்படுத்த விழா!
துவக்கப்பள்ளியிலும் மாணவர் தனித்திறனை மேம்படுத்த விழா!
UPDATED : ஜன 11, 2016 12:00 AM
ADDED : ஜன 11, 2016 12:12 PM
கரூர்
:
மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட அனைவருக்கும் கல்வி இயக்கம்
உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கும் சார்பில் அரசு பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, அந்தந்த மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, ஆசிரியர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி குழந்தைகளில் தனிதிறன்களை மேம்படுத்தவும் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை தவிர்த்து, 29 மாவட்டங்களில் விழா நடத்தப்படும். அந்தந்த பள்ளி தலைமையாசிரியர், மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்தாலோசித்து விழா நடத்தும் தேதி முடிவு செய்ய வேண்டும். பள்ளிகளை மாணவர், மாணவிகளில் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
இதன்படி, துவக்கப்பள்ளிக்கு 100ம், நடுநிலைப்பள்ளி, 150க்கும் மாணவர்கள் அதிகமாக இருக்க வேண்டும். துவக்கப்பள்ளிகளுக்கு தலா,
5,000 ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு தலா, 6,000 ரூபாய் நிதி வழங்கப்படும். மொத்தமாக தமிழகம் முழுவதும்,
3,127 துவக்கப்பள்ளிகள், 2,396 நடுநிலை பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படும். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
கரூர் அனைவருக்கு கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கூறியதாவது:
விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பள்ளிகளுக்கு ஆண்டு விழா கொண்டாட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைமையாசிரியர்களிடமிருந்து திட்ட அறிக்கை கிடைத்தவுடன், பள்ளிகளில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். சென்ற ஆண்டு நடுநிலைப்பள்ளிகளுக்கு மட்டும், 2,250 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு துவக்கப்பள்ளிகளும் சேர்க்கப்பட்டு, விழா நடத்தும் நிதியும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
