‘ராகிங்’கை கட்டுப்படுத்த நடவடிக்கை; மத்திய அரசு விளக்கம்
‘ராகிங்’கை கட்டுப்படுத்த நடவடிக்கை; மத்திய அரசு விளக்கம்
UPDATED : ஆக 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ‘ராகிங்’ கொடுமையால் மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
‘ராகிங்’கைக் கட்டுப்படுத்த கடந்தாண்டு ஜூலை 17 மற்றும் டிசம்பர் 10 ஆகிய தேதிகளில் சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
‘ராகிங்’கில் மாணவர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக கல்லூரியில் இருந்து அவர்களை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இது குறித்து அமைக்கப்பட்ட ஆர்.கே.ராகவன் கமிட்டி பரிந்துரையையும் கோர்ட் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் கூறுகையில், ‘ராகிங் தொடர்பாக கோர்ட் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் கையேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளைப் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்றி வருகின்றன’ என்றார்.
மத்திய அரசு அளித்த உறுதிமொழியையடுத்து ‘ராகிங்’ தொடர்பான அனைத்து வழக்குகளை கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், கல்லூரி மற்றும் பல்கலையில் நடைபெறும் மாணவர் சங்கத் தேர்தலில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான மனுக்களை தனியாக விசாரிப்பதாக கோர்ட் அறிவித்துள்ளது.

