UPDATED : டிச 09, 2025 09:56 AM
ADDED : டிச 09, 2025 09:56 AM
பெங்களூரு தமிழ் புத்தக திருவிழாவில் நேற்று, தமிழ் மொழித்திறன் போட்டிகள் நடந்தன.
பள்ளிகள் தெய்வானையம்மாள் தமிழ் துவக்க பள்ளி, ஹலசூரு செயின்ட் ஜான்ஸ் ரோட்டில் உள்ள ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., துவக்க பள்ளி, ஹலசூரு ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., கோவிந்தம்மாள் துவக்க பள்ளி, ஜாலஹள்ளி பாத்திமா பள்ளி, ஆஸ்டின் டவுன் அரசு தமிழ் துவக்க பள்ளி, பிரேசர் டவுன் ஆர்.பி.பி.ஏ.எம்.ஹெச்.இ.எஸ்., அண்ணாசாமி முதலியார் துவக்க பள்ளி.
ராமமூர்த்திநகர் ஐ.டி.ஐ., வித்யா மந்திர் தமிழ் துவக்க பள்ளி, மர்பி டவுன் அரசு துவக்க பள்ளி, மாரத்தஹள்ளி வேல்ஸ் குளோபல் பள்ளி, ஹொரமாவு வேல்ஸ் குளோபல் பள்ளி, டேவிஸ் ரோடு செயின்ட் அல்போன்ஸ் அகாடமி, என்.எஸ்.லேன் அரசு துவக்க பள்ளி, ஜெய்பாரத் நகர் அரசு தமிழ் பள்ளி, காக்ஸ் டவுன் அரசு தமிழ் பள்ளி என 14 பள்ளிகளின், மாணவ - மாணவியர் தங்கள் ஆசிரியர்களுடன் உற்சாகமாக வந்து, தமிழ் மொழித்திறன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுத்த மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மிகுந்த ஆர்வமாக இருந்தனர். ஒவ்வொருவர் பெயராக வாசித்து மேடைக்கு அழைத்த போது, சிட்டுக்குருவி போல பறந்து சென்றனர். செய்கை பாடல், கேள்விக்கு என்ன பதில், படம் பார்த்து கதை சொல் என்று மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
இதில் செய்கை பாடல் என்பது மாணவ - மாணவியர் தங்கள் உடல்களை அசைத்தபடி செய்கை மூலம் பாடல் பாடுவது ஆகும். பாரதியாரின் ஓடி விளையாடு பாப்பா, பாம் பாம் வண்டி, சிக்கு புக்கு ரயில் உள்ளிட்ட பாடல்களுக்கு, தங்கள் உடல்கள், செய்கை மூலம் பாடல் பாடி மாணவ மாணவர் அசத்தினர்.
3 ரவுண்டுகள் கேள்விக்கு என்ன பதில் 3 ரவுண்டாக நடந்தது. பெரிய எல்.இ.டி., திரையில் தமிழ் எழுத்துகள் கலைத்து கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த எழுத்துகளை பார்த்து சொற்களை உருவாக்க வேண்டும். இரண்டாவது ரவுண்டில் பொருட்களை ஆங்கிலத்தில் கூறுவதை, தமிழில் கூற வேண்டும். உதாரணமாக பேன் என்றால் மின்விசிறி என்றும், மொபைல் போன் என்று கைபேசி என்றும் கூற வேண்டும். மூன்றாவது ரவுண்டு படத்தை பார்த்து வாக்கியமாக சொல்ல வேண்டும். அதாவது எல்.இ.டி., திரையில் பழம் திரையிடப்பட்டால், பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்ல வேண்டும்.
படம் பார்த்து கதை சொல்வது என்பது, எல்.இ.டி., திரையில் ஏதாவது ஒரு படத்தை வெளியிடுவர். அந்த படத்தை பார்த்ததும் தங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை கதையாக சொல்ல வேண்டும். மாணவர்கள் தங் கள் திறமைகளை வெளிப்படுத்திய போது, இவர்களுக்குள் இத்தனை திறமை ஒழிந்து உள்ளதா என்று, அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை மெய்சிலித்தனர்.
யாருக்கு பரிசு?
செய்கை பாடலில் ஐ.டி.ஐ., வித்யா மந்திர் மாணவி நேத்ரா முதல் பரிசும், காக்ஸ் டவுன் துவக்க பள்ளி மாணவி ராஜேஸ்வரி இரண்டாம் பரிசும், ஜெய்பாரத் நகர் அரசு துவக்க பள்ளி மாணவர் சஞ்சய் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
கேள்விக்கென்ன பதிலில் ஜாலஹள்ளி பாத்திமா பள்ளி மாணவர் தனிஷ்வரன் முதல் பரிசும், ஐ.டி.ஐ., வித்யா மந்திர் மாணவி நான்ஸி, மாணவர் விஸ்வா இரண்டாவது பரிசும், ஜெய்பாரத் நகர் அரசு துவக்க பள்ளி மாணவி சோபியா, கிருத்திகா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
படம் பார்த்து கதை சொல்வதில், செயின்ட் ஜான்ஸ் ரோடு ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., பள்ளி மாணவி ஸ்ரீஷா முதல் பரிசும், செயின்ட் அல் போன்ஸ் மாணவி லோகிதா இரண்டாம் பரிசும், மாரத்தஹள்ளி வேல்ஸ் பள்ளி மாணவர் ஆர்ஷியா ரிப்பத் மூன்றாம் பரிசும் பெற்றனர். பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவி க்கப்பட்டனர். ஆசிரியர்களும் மேடைக்கு அழைத்து வாழ்த்தப்பட்டனர். கலந்து கொண்ட மாணவ - மாணவியருக்கு தலா 100 ரூபாய் மதிப்பிலான புத்தகம் வாங்க கூப்பன் வழங்கப்பட்டது.
பொதுவாக பெங்களூரில் வசிக்கும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் நன்கு பேச தெரியும். ஆனால் படிக்கவோ, எழுதவோ அவ்வளவாக வராது. இப்படிப்பட்டவர்களுக்கு எங்கிருந்து பாரதியார் பாடல், கதை சொல்வது எல்லாம் தெரியும் என்று பலர் நினைத்து இருக்கலாம். உங்கள் நினைப்புகள் தவறு என்று, இளஞ்சிட்டுகள் நிரூபித்து உள்ளனர்.
இப்போட்டியில் கலந்து கொண்ட இளஞ்சிட்டுகள் முகத்தில் ஏதோ ஒன்று பெரிதாக சாதித்தது போன்ற சந்தோஷத்தை காண முடிந்தது.

