மும்பை வந்து சென்ற அல் குவைதா தொடர்பு நபர்: போலீசார் 'ரெய்டு'
மும்பை வந்து சென்ற அல் குவைதா தொடர்பு நபர்: போலீசார் 'ரெய்டு'
ADDED : நவ 12, 2025 11:52 PM

மும்பை: அல் குவைதா மற்றும் அல்குவைதா இந்தியா ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட நபர், சமீபத்தில் மும்பை அருகே உள்ள தானே பகுதிக்கு வந்து சென்றதால், அங்கு நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், கடந்த அக்டோபர் 27ல் புனேவைச் சேர்ந்த மென்பொறியாளர் ஜுபைர் ஹங்கர்கேகர், 37, என்பவரை கைது செய்தனர். இவருக்கு அல்குவைதா மற்றும் அல்குவைதா இந்தியா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
அவரது வீட்டை சோதனை செய்ததில், 'மொபைல் போன்' பறிமுதல் செய்யப்பட்டது. அதில், இந்திய துணை கண்டத்தில் அல்குவைதா மற்றும் அல்குவைதாவின் கொள்கைகள் என்ற பி.டி.எப்., கோப்பு பதிவிறக்கம் செய்யப்பட்டு, பின் அழிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவரது மொபைல் போனில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் தொடர்பு எண்கள் இருந்துள்ளன. பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் பேச்சு ஒன்றின் உருது மொழிபெயர்ப்பு பக்கங்களும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மும்பை புறநகர் பகுதியான தானேவின் மும்ராவுக்கு வந்துள்ளார். அங்கு ஆசிரியர் ஒருவரின் வீட்டில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து, அந்த ஆசிரியரின் வீடு மற்றும் புனேவில் உள்ள மற்றொரு நபரின் வீடுகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:
ஜுபைர் சந்திப்பு நடத்திய இரண்டு வீடுகளில் சோதனை நடத்தினோம். அவர்கள் குற்றவாளிகளா என்பது குறித்து தொடர் விசாரணையில் தெரியவரும். இந்த வழக்கிற்கும் டில்லி குண்டுவெடிப்பு வழக்கிற்கும் இதுவரை தொடர்பு இல்லை. இருப்பினும் அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

