பீஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு தன் பலத்தை காட்டிய ஒவைசி!
பீஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு தன் பலத்தை காட்டிய ஒவைசி!
ADDED : நவ 14, 2025 01:52 PM

-நமது நிருபர்-
தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மறுத்த தேஜஸ்விக்கு பாடம் கற்பிக்கும் வகையில், ஒவைசியின் கட்சி பீஹாரில் 2020ல் வென்ற அதே 5 தொகுதிகளில் மீண்டும் வெற்றி முகத்தில் இருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிட்டது. அக்கட்சி 5 தொகுதிகளில் வென்றது. லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியின் முஸ்லிம் வாக்கு வங்கியில் ஒவைசி கட்சி சேதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஒவைசி கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் ஆர்ஜேடி கட்சியில் சேர்ந்தனர். இந்த முறை, தேர்தலில் காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியில் சேர ஒவைசி விரும்பினார்.
பாஜ கூட்டணியை தோற்கடிக்க நாம் ஒன்று சேர வேண்டும் என்று கூறிய ஒவைசி, கூட்டணிக்கு தயாராக இருப்பதாக தேஜஸ்விக்கு கடிதமும் அனுப்பினார். ஆனால் அதனை துளி கூட தேஜஸ்வி மதிக்கவில்லை.
பொது நிகழ்சியில் பேசும்போது கூட, 'ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணியில் 6 தொகுதிகள் தந்தால் இணைவேன்' என ஒவைசி கூறியிருந்தார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. தனது கட்சியின் முஸ்லிம் ஓட்டு வங்கியை யாராலும் பறிக்க முடியாது என தேஜஸ்வி அதிக நம்பிக்கையுடன் இருந்தார்.
வேறு வழியில்லாத ஒவைசி, தேர்தலில் தனித்து களம் இறங்கினார். இப்போது அவரது கட்சி வேட்பாளர்கள் 2020ல் வெற்றி பெற்ற அதே 5 தொகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளனர். இதன் மூலம் தனது பலம் என்ன என்பதை தேஜஸ்வி யாதவுக்கு ஒவைசி நிரூபித்துள்ளார் என்கின்றனர், பீஹார் அரசியல் பிரமுகர்கள்.

