பவுலர்கள் அசத்தல்: இந்திய அணி 101 ரன்னில் அபார வெற்றி
பவுலர்கள் அசத்தல்: இந்திய அணி 101 ரன்னில் அபார வெற்றி
UPDATED : டிச 09, 2025 10:26 PM
ADDED : டிச 09, 2025 10:23 PM

கட்டாக்: முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில்,இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றிபெற்றது.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி, ஒரு நாள் தொடரில் இந்திய அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி-20தொடர் இன்று தொடங்கியது.
இரு அணிகளுக்கிடையே முதலாவது டி-20 போட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடந்தது.இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி, பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதிர்ச்சி தந்த நிகிடி
சுப்மன் கில் 2 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி அடித்து,4 ரன்னில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 12 ரன்கள் எடுத்தபோது, நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக ரன்சேர்த்த அபிஷேக் சர்மா, ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். 26(2பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மா நிகிடி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து அக்ஷர் பட்டேல் 23 ரன்களுக்கு சிபம்லா பந்தில் அவுட் ஆனார்.
ஹர்திக் பாண்ட்யா அதிரடி அரைசதம்
ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி, ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். ஜிதேஸ் சர்மா ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுக்க இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. தென் ஆப்ரிக்க அணியின், நிகிடி 3 விக்கெட்டுகளும், சிபம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
176 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியின் துவக்க வீரர்களாக குயின்டன் டிகாக், மார்க்ரம் களமிறங்கினர். துவக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. 2 பந்துகளை சந்தித்த டிகாக், ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்க்ரம், 14 ரன்களுக்கு அக்ஷர் பட்டேல் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் 14 ரன்கள், பிரேவிஸ் 22 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர்.
இந்திய பவுலர்கள் அசத்தல்
அடுத்து வந்த டேவிட் மில்லர், பெரிரீரா, ஜேன்சன், கேசவ் மகராஜ், நார்ட்ஜே, சிபம்லா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, 12.3 ஓவரிலேயே எல்லா விக்கெட்களையும் பறிகொடுத்து 74 ரன்களுக்கு சுரண்டது. இதனையடுத்து இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல் ஆகியோர் அபாரமாக பந்து வீசி, தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி, 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

