கோவா இரவு விடுதி உரிமையாளர்களுக்கு சிக்கல்: இன்னொரு விடுதியை இடிக்கும் பணி தீவிரம்
கோவா இரவு விடுதி உரிமையாளர்களுக்கு சிக்கல்: இன்னொரு விடுதியை இடிக்கும் பணி தீவிரம்
ADDED : டிச 09, 2025 10:42 PM

பனாஜி: கோவாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்த இரவு விடுதியின் உரிமையாளர்களுக்கு சொந்தமான மற்றொரு விடுதியை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில் கடந்த 6ம் தேதி நள்ளிரவு, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது, முதல் தளத்தில் வேயப்பட்டிருந்த பனை ஓலை கூரைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற முயன்றனர். குறுகிய வாசல் என்பதால், அனைவராலும் ஒரே சமயத்தில் வெளியேற முடியவில்லை.
அதில், சிலர் தரைதளத்தில் இருந்த சமையலறையில் புகுந்தனர். இதற்கிடையே, கூரையில் பற்றிய தீ, விடுதியின் பல பகுதிகளுக்கு மளமளவென பரவியது. அப்பகுதியே புகைமண்டலமானது.இதில், பலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், விடுதி ஊழியர்கள் 20 பேரும், வாடிக்கையாளர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர். விபத்து நடந்ததை அடுத்து விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகியோர் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தப்பி சென்றனர். அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இண்டர்போல் மூலம் அவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிரடி
இந்நிலையில், இந்த இரண்டு பேருக்கு சொந்தமாக வாகாடோர் பகுதியில் ரோமியோ லேன் கடற்கரை பகுதியில் மற்றொரு இரவு விடுதி ஒன்று உள்ளது. தீ பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பிரச்னைகளில் அந்த விடுதியை இடித்து அகற்றும்படி கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டு இருந்தார்.
இதனையடுத்து அவற்றை புல்டோசர் மூலம் இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான மற்றொரு சொத்தையும் போலீசார் முடக்கியுள்ளனர். இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.

