தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு  தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு

'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு  தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு

'எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு  தயார்!: மழை நிலவரம், விவசாய பணிகள் கண்காணிப்பு

10


ADDED : ஜூலை 09, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

10

ADDED : ஜூலை 09, 2026 03:38 AM


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -:

'எல் நினோ' எனப்படும் வானிலை மாறுபாட்டின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மழை நிலவரம் மற்றும் விவசாய பணிகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தமிழகம் நீங்கலாக வறட்சியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உட்பட, 13 மாநிலங்களில் விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கள அளவிலான வியூகங்களை மத்திய அரசு வகுத்துள்ளது. புதுடில்லியில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று கூறியதாவது:

நடப்பு காரிப் பருவத்தில், இதுவரை 8.64 கோடி ஏக்கர் விவசாய நிலத்தில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 2.27 கோடி ஏக்கர் குறைவு. பருவமழை தாமதமாக தொடங்கியதால், சோயாபீன் மற்றும் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், குறுகிய காலத்தில் விளையும், குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயிறு போன்ற பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

1.75 லட்சம் குவின்டால்


ஜூனில் மழைப்பொழிவு பற்றாக்குறை, 33 சதவீதமாக இருந்தது. ஜூலையில் மழை அதிகரித்ததால், அது தற்போது, 24 சதவீதமாக குறைந்துள்ளது. மழை குறைவாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையும், 262-ல் இருந்து, 178 ஆக குறைந்துள்ளது.

வறட்சி அபாயத்தை எதிர்கொள்ள, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் மாவட்ட அளவிலான அவசரகால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, வறட்சியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மஹாராஷ்டிரா, ம.பி., குஜராத், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்கம், ஒடிஷா, பஞ்சாப், உ.பி., ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீஹார் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சாகுபடிக்கு தேவையான விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நாடு முழுதும், 1.75 லட்சம் குவின்டால் விதைகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

பயிர் சேதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும் வகையில், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிக விவசாயிகளை இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய கடன் வழங்கும் திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பற்றாக்குறை


விவசாயக் கடன் கேட்டு, ஜூன் 30-க்குள் பெறப்பட்ட 1.14 லட்சம் விண்ணப்பங்களில், 94,000க்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பருவமழை கடுமையாக பொய்த்தால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதால், உபரி தீவனம் உள்ள பகுதிகளில் இருந்து பற்றாக்குறை பகுதிகளுக்கு கொண்டு செல்ல முன்கூட்டியே திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

எல் நினோ தாக்கத்தை முன்னிட்டு, எல் நினோ கண்காணிப்பு மையம், பயிர் - வானிலை கண்காணிப்பு குழு, மாநில கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பருவமழை, சாகுபடி மற்றும் பயிர்களின் நிலைமை ஆகியவற்றை மத்திய அரசு தினசரி கண்காணித்து வருகிறது.

மழை பற்றாக்குறை மற்றும் எல் நினோவால் மாறும் சூழ்நிலைகளை மத்திய அரசு வெறும் பார்வையாளராக கண்காணிப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, அதிலிருந்து உருவாகும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து வளங்களுடனும், தெளிவான வழிமுறைகளுடனும் தயார் நிலையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மானாவாரி விவசாயிகள் ஒரே பயிரை சார்ந்திராமல், பயிர் பன்முகத்தன்மையை கடைப்பிடிப்பதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்கலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

'எல் நினோ' என்றால் என்ன?

எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில், கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடையும் ஒரு இயற்கையான பருவநிலை நிகழ்வாகும். இது உலகெங்கிலும் உள்ள மழைப்பொழிவு, காற்று மற்றும் வெப்பநிலை முறைகளை மாற்றி உலகளாவிய காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெப்பநிலை ஏற்றத்தாழ்வு உலகெங்கிலும் தீவிரமான வானிலை மாற்றங்களை உருவாக்குகிறது. நம் நாட்டில், எல் நினோவால், பொதுவாக வறட்சி அல்லது இயல்பை விட குறைவான பருவமழை பொழிவை ஏற்படுத்தி வெப்பநிலையை அதிகரிக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us