அரசியல் லாபத்துக்காக பிளவை ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
அரசியல் லாபத்துக்காக பிளவை ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
UPDATED : டிச 07, 2025 02:13 PM
ADDED : டிச 07, 2025 02:04 PM

மதுரை: 'ஒரு சிலர், அரசியல் லாபத்திற்காக பிரிவுகளையும், பிளவுகளை உண்டாக்குகின்றனர்,' என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை உத்தங்குடியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.3 ஆயிரத்து 65 கோடியில் 63 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்தார். மேலும், 2 ஆயிரத்து 70 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
அரசியல் சூழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; மக்களுக்காக பல திட்டங்களை நம் அரசு கொண்டு வந்ததால் தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர். வயிற்று எரிச்சலால் ஆரோக்யமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். உறுதியாக சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அனைத்தையும் முறியடிப்போம்.
என்னாச்சு?
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிருபிக்கும் விதமாக, ரூ.36,660 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இதுதான் எங்களின் அரசியல். 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு? குஜராத் போன்ற பாஜ ஆளும் மாநிலங்களுக்கு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு ஏதும் செய்வதில்லை.
மதுரைக்கு மெட்ரோ ரயிலை சப்பையான காரணங்கள் சொல்லி நிராகரிக்கிறார்கள். பாஜ ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயிலுக்கு அனுமதி கொடுத்தீர்கள். மதுரையில் மெட்ரோ ஓடக் கூடாதா?
வளர்ச்சி தான் சிந்தனை
நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றி தான். ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனை தான். தேவையில்லாத பிரச்னைகளை கிளப்பி, வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். காலம் காலமாக கார்த்திகை தீபத்திற்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3ம் தேதி மாலை 6 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, அதே நேரத்தில் உச்சிப்பிள்ளையார் கோவில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றி, சுவாமி புறப்பாடாகியது.
இது எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டது. இது எல்லாம் உள்ளூர் மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் எல்லாம் நல்லபடியாக தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினர். ஆனால், இப்போது என்ன பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையை கிளப்பும் கூட்டத்தின் நோக்கம் என்ன? இதுவும் மக்களுக்கு நன்கு தெரியும்.
இதுவல்ல ஆன்மிகம்
ஆன்மிகம் என்பது மன அமைதியை, நிம்மதி தந்து மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டும். நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும். இதுதான் உண்மையான ஆன்மிகமாக இருக்க முடியும். ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக பிரிவுகளையும், பிளவுகளை உண்டாக்குகின்றனர். இது கேடுகெட்ட அரசியல். தீபம் எங்கு, எப்போது ஏற்ற வேண்டுமோ, அங்கு வழக்கம் போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டு இருக்கிறது.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளது இந்த அரசு. இப்படிபட்ட அரசை ஆன்மிகத்திற்கு எதிரி என்று சொன்னால், சொல்பவர்களின் உள்நோக்கம் என்ன என்பது உண்மையான பக்தர்களுக்கு நன்கு தெரியும்.
சிக்சர் தான்
டில்லியில் இருந்து நமக்கு எத்தனை இடையூறுகள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், கவர்னர் மூலம் முட்டுக்கட்டை போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடைந்திருக்கிறது. எங்களின் வளர்ச்சி பயணத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எப்படி பந்து வீசினாலும், அடிப்பது சிக்சர் தான்.
அந்த டீமுக்கு பழைய அடிமைகள், புதிய அடிமைகள், பி டீம், சி டீம் சிக்கலாம். ஆனால், அந்தத் தொடரில் நாங்கள் தான் சாம்பியன். வரும் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப் போகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

