பீஹார் வரலாற்றில் காங்கிரசுக்கு கிடைத்த 2வது மோசமான தோல்வி
பீஹார் வரலாற்றில் காங்கிரசுக்கு கிடைத்த 2வது மோசமான தோல்வி
ADDED : நவ 14, 2025 10:27 PM

பாட்னா: பீஹார் தேர்தல் வரலாற்றில் 2010 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான தோல்வியை பதிவு செய்திருந்தது. தற்போது(2025) நடந்த தேர்தலில் 6 ல் மட்டுமே வெற்றி பெற்று 2வது மோசமான தோல்வியை காங்கிரஸ் பதிவு செய்துள்ளது.
பீஹார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. பீஹாரில் ராகுல் பாதயாத்திரை நடத்தியதும் கட்சி பலம் பெற்றதாக கூறி காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டது. ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆர்ஜேடி அதற்கு சம்மதிக்கவில்லை. கடந்த தேர்தலில் 70 தொகுதிகளை கொடுத்து 19 ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனையடுத்து இந்த முறை அப்படி நடக்கக்கூடாது என்பதற்காக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க தேஜஸ்வி மறுத்தார். இதனால் இரு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் மறுத்தது. பிறகு ஒரு வழியாக இரு கட்சிகளும் பேசி தேர்தலை சந்தித்தன. காங்கிரசுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நீண்ட இடைவேளைக்கு பிறகு பீஹார் வந்த ராகுல் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது சகோதரி பிரியங்கா, காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் அக்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. 6 ல் மட்டுமே அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
நாடு விடுதலை பெற்ற பிறகு பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று வந்த காங்கிரஸ், பிறகு சிறுக சிறுக பலத்தை இழந்து ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை வென்றுள்ளது.சுதந்திரத்துக்கு பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை:
1952 - 239
1957 -210
1962-185
1967 -128
1972 - 167
1977 -286
1980 - 169
1985 - 196
1990 - 71
1995 -29
2000 - 23
2005 பிப்.,- 10(84 ல் போட்டி)
2005 அக்., - 9 (51 ல் போட்டி)
2010 - 4( 243ல் போட்டி)
2015- 27( 41ல் போட்டி)
2020 -19( 70 ல் போட்டி)
2025 - 6( 61 ல் போட்டி) தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

