'வந்தே மாதரம்' மீதான விவாதம்: சிவா - முருகன் கடும் வாக்குவாதம்
'வந்தே மாதரம்' மீதான விவாதம்: சிவா - முருகன் கடும் வாக்குவாதம்
ADDED : டிச 10, 2025 12:31 AM

'வந்தே மாதரம்' மீதான விவாதத்தில், தி.மு.க., - எம்.பி., சிவா ராஜ்ய சபாவில் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் பால கங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கஸ்துாரிபா காந்தி போன்றோர் நினைவாக சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள் உள்ளன. வட மாநிலங்களைச் சேர்ந்த பல சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழகத்தில் நினைவுகூரப்படுகின்றனர்.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோரை, வட மாநிலங்களில் உள்ள யாருக்காவது தெரியுமா? அவர்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? குறைந்தபட்சம் பள்ளி பாடத்திட்டத்திலாவது இவர்கள் குறித்து கற்பிக்க வேண்டும். அப்போது தான், பத்மாசனி அம்மாள், செண்பகராமன் பிள்ளை உள்ளிட்டோரின் தியாகம் வெளிச்சத்துக்கு வரும்.
செண்பகராமன் பிள்ளையின் பெயரை ஒரு போர்க்கப்பலுக்கு வைக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு வேறு எவரையும் விட குறைந்தது அல்ல. அவர்களின் பங்களிப்பு மறக்கப்பட்டு விட்டது. மக்கள் அறியாத இத்தகைய கதாநாயகர்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ''சிவா தவறான தகவல்களை தெரிவிக்கிறார். 20 ஆண்டுகளாக காங்., கூட்டணியில் இருந்த போது, தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை தேசிய அளவில் தி.மு.க., ஏன் முன்னிலைப்படுத்தவில்லை?'' என, கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்ட துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், இருவரையும் சமாதானப்படுத்தினார்.
- நமது டில்லி நிருபர் -

