முதியோருக்கு வீடு தேடி வருது இலவசமாக ரேஷன் பொருட்கள்: சட்டசபை தேர்தல் வருவதால் திடீர் பாசம்
முதியோருக்கு வீடு தேடி வருது இலவசமாக ரேஷன் பொருட்கள்: சட்டசபை தேர்தல் வருவதால் திடீர் பாசம்
ADDED : நவ 13, 2025 12:48 AM

சென்னை: முதியோரின் வீடுகளில், ரேஷன் பொருட்களை நேரடியாக வழங்கியும், சிலர் பணம் இல்லாமல் வாங்க சிரமப்படுகின்றனர்.
இதனால், பொருட்களை ஊழியர்கள் திரும்ப எடுத்து வருகின்றனர். எனவே, முதியோருக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. முதியோர், மாற்றுத்திறனாளிகள், கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க சிரமப்படுகின்றனர்.
அவர்களின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கும், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டம், கடந்த ஆகஸ்டில் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் வாயிலாக மாநிலம் முழுதும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான, 15.81 லட்சம் கார்டுகள், 1.27 லட்சம் மாற்றுத்திறனாளி கார்டுதாரர்கள் ஆகியோரது வீடுகளில், ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இம்மாதம் முதல், 70க்கு பதிலாக, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதனால், கூடுதலாக, ௪ லட்சம் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர். வீடுகளில் பொருட்களை வழங்கும்போது, சிலர் பணம் இல்லாமல் வாங்குவதில்லை.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரேஷன் கடையில் அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ சர்க்கரை, 25 ரூபாய், துவரம் பருப்பு, 30 ரூபாய், லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வீடுகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும்போது, சில முதியோர் பணம் இல்லாததால் வாங்குவதில்லை என, தெரியவந்துள்ளது.
இதனால், வீட்டிற்கு எடுத்து சென்ற பொருட்களை திரும்ப கடைக்கே எடுத்து வருவதால், முதியோருக்கு பயன் கிடைப்பதில்லை.
சட்டசபை தேர்தல் வருவதால், முதியவர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
எனவே, அவர்களுக்கு பொருட்களை இலவசமாக வழங்கினால் எவ்வளவு செலவாகும்; அந்த செலவை ஈடு செய்வது எப்படி என, அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து விரைவாக முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

