இந்திய குடியுரிமை பெறும் முன் வாக்காளராக சேர்ந்தது எப்படி? சோனியாவுக்கு கோர்ட் 'நோட்டீஸ்'
இந்திய குடியுரிமை பெறும் முன் வாக்காளராக சேர்ந்தது எப்படி? சோனியாவுக்கு கோர்ட் 'நோட்டீஸ்'
ADDED : டிச 10, 2025 12:15 AM

புதுடில்லி: இந்திய குடியுரிமை பெறும் முன், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியாவுக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா, ஐரோப்பிய நாடான இத்தாலியில் பிறந்தவர். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவை, 1968ல் காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து, 1983ம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றார்.
அதற்கு முன்னதாக, 1980ம் ஆண்டே சோனியாவின் பெயர் டில்லி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடும்படி, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, கடந்த செப்., 11ல் விசாரித்த கூடுதல் சிறப்பு மாஜிஸ்திரேட் வைபவ் சவுரஷியா பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, இந்த நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. எனினும், இந்த தவறை தேர்தல் கமிஷன் அப்போதே கண்டறிந்து சோனியாவின் பெயரை, 1982ல் நீக்கியது.
அதன்பின், 1983ம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றபின், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதுதவிர, இவ்வழக்கில் வாக்காளர் பட்டியலின் நகல் மட்டுமே மனுதாரர் இணைத்துள்ளார். இது, குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக இல்லை. எனவே, சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய அவசியமில்லை. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து விகாஷ் திரிபாதி டில்லி நீதிமன்றத்தில் சமீபத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி சோனியா மற்றும் டில்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

