மேகதாது அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் எதிர்க்கும்: எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி
மேகதாது அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் எதிர்க்கும்: எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி
ADDED : ஜூலை 03, 2026 02:27 AM

கோவை: ''மேகதாது அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் எதிர்க்கும்,'' என, காங்கிரஸ் எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.
கோவை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பணம் கொடுத்து, த.வெ.க., -- எம்.எல்.ஏ.,வை விலைக்கு வாங்க முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்து மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுதான் குதிரை பேரம். பேச்சு நடத்துவதே சட்டப்படி தவறு தான்.
கடந்த, 50 நாள் ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளதாக பொதுமக்களே பேசுகின்றனர். அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் வேலைகள் உடனே செய்து தரப்படுகின்றன. இது ஒரு நல்ல துவக்கம்.
தமிழகத்தில் இது ஒரு புரட்சி தான். 50 நாட்களில் சட்டம் - ஒழுங்கு சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர். தி.மு.க., எதிர்க்கட்சியில் அமர வேண்டும் என்பது தான் அது. தி.மு.க., ஏன் பயப்படுகிறது? தி.மு.க.,வுக்கு என்ன பயம்?
மேகதாது அணை என்பது, தமிழகம், கர்நாடகா இரு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்னை. மேகதாதுவில் எந்த கட்டுமானத்திற்கும் தமிழக காங்கிரஸ் எதிரானது. கர்நாடகாவில் எந்த அரசு இருந்தாலும், எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால், ஒரு தேசிய கட்சி, தமிழக அரசில் பங்கு வகிக்கிறது என்பதாலும், பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
