ஆஜராகாவிட்டால் ஆதரவாளருக்கு ஜெயில்; எம்.பி., கதிர் ஆனந்தை வறுத்தெடுத்த நீதிபதி
ஆஜராகாவிட்டால் ஆதரவாளருக்கு ஜெயில்; எம்.பி., கதிர் ஆனந்தை வறுத்தெடுத்த நீதிபதி
ADDED : நவ 14, 2025 07:07 AM

வேலுார்: தேர்தல் பண பட்டுவாடா தொடர்பான வழக்கில், கோர்ட்டில் ஆஜரான வேலுார் தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்திடம், 'உங்கள் ஆதரவாளர்கள் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால், வாரன்ட் பிறப்பித்து சிறையில் அடைக்க நேரிடும்' என நீதிபதி கண்டித்தார்.
எச்சரிக்கையை மீறி கோர்ட்டில் ஆஜராகாத எம்.பி.,யின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, வேலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளரான கதிர் ஆனந்த், வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்ய உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காட்பாடியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமென்ட் கிடங்கில் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாய் மற்றும் வாக்காளர் பட்டியல் விபரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர் .
இதனால், அந்த தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு, பின்னர் நடத்தப்பட்டது. கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இது தொடர்பாக, கதிர் ஆனந்த் எம்.பி.,யின் ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூவர் மீதும் காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, வேலுார் நீதித்துறை நடுவர் முதலாவது நீதிமன்றத்தில் நடக்கிறது. கதிர் ஆனந்த் நேற்று காலை கோர்ட்டில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'இந்த வழக்கில் இரண்டு மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் இன்று மாலை 4:00 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; இல்லையெனில், அவர்களை பிடித்து சிறையில் அடைக்கும் சூழல் உருவா கும்' என நீதிபதி கண்டித்தார் .
இதனால், நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து, நேற்று மாலை 4:00 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கதிர் ஆனந்த் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஆஜராகினர்; பூஞ்சோலை சீனிவாசன் ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவ., 17க்கு ஒத்தி வைத்தார்.

