மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு; ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து
மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு; ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து
UPDATED : டிச 07, 2025 11:41 AM
ADDED : டிச 07, 2025 10:49 AM

மதுரை: மதுரையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 'தமிழகம் வளர்கிறது' எனும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மொத்தம், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், 36,660.35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளில், 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
மேலுாரில், 'சிப்காட்' தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடக்கும் விழாவில், 63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை, முதல்வர் வழங்குகிறார்.
முன்னதாக, மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; ஆட்சிக்கு வந்தவுடன் நலிவடைந்த பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதை அறிந்து, புரிந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்தோம். முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் தான் என்பதை உணரச் செய்தோம். அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழகம் ரைஸிங் என்ற மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முதலீட்டாளர்களின் பங்கும் அவசியம். அனைத்து துறைகளையும் ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். இந்தியாவில் எந்த மாநிலங்களும் ஒப்பந்தங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததில்லை. முதலீடு அவ்வளவு எளிதில் கிடைத்திடாது. மாநிலத்தின் கொள்கைகள், கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, தங்களின் வணிக நோக்கங்களுக்கு பொரூத்தமாக இருக்கிறதா? என்பதை பார்த்து தான் இடத்தை தேர்வு செய்வார்கள். அப்படி முதல் பெயராக தமிழகம் இருக்கிறது.
மதுரையை தூங்கா நகரம் என்பதற்கு பதிலாக, விழிப்புடன் இருக்கும் நகரம் என்று தான் சொல்ல வேண்டும். தமிழர் நாகரிகம் எந்த அளவுக்கு தொன்மையானது என்பதை மதுரை எடுத்து கூறுகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்கி எழுத வேண்டும் என்று அடிக்கடி கூறி வருகிறேன். மதுரை கோவில் நகரமாக மட்டுமல்லாமல், தொழில் நகரமாகவும் இருக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க உள்ளோம். இதன்மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

