வந்தே மாதரம் பாடல் மகிமையை குறைத்து மதிப்பிடும் கட்சிகள்: பார்லி.யில் அமித் ஷா விமர்சனம்
வந்தே மாதரம் பாடல் மகிமையை குறைத்து மதிப்பிடும் கட்சிகள்: பார்லி.யில் அமித் ஷா விமர்சனம்
ADDED : டிச 09, 2025 02:29 PM

புதுடில்லி: மேற்கு வங்க தேர்தலுடன் தொடர்படுத்தி வந்தே மாதரம் பாடலின் மகிமையை சிலர் குறைத்து மதிப்பிட விரும்புகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து லோக்சபாவில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. பிரதமர் மோடி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இன்றைய தினம், ராஜ்யசபாவில் சிறப்பு விவாதம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்திற்கு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். அப்போது அவையில் அவர் பேசியதாவது;
வந்தே மாதரம் அவசியம் குறித்து லோக்சபாவில் சில எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியமானது, இப்போது தேவைப்படுகிறது. 2047ம் ஆண்டு தொலைநோக்கு பார்வையாக வைத்துள்ள பிரகாசமான எதிர்காலத்திற்கு, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக வந்தே மாதரம் பாடல் இருக்கும்.
இரு அவைகளிலும் வந்தே மாதரம் பற்றிய விவாதம் எதிர்கால சந்ததியினருக்கு அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், மகிமையையும் புரிந்துகொள்ள உதவும்.
மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள தேர்தல்கள் காரணமாக இந்த விவாதங்கள் நடத்தப்படுவதாக சிலர் நினைக்கின்றனர். அங்கு நடைபெற உள்ள தேர்தல்களுடன் இதை தொடர்புப்படுத்தி பேசுவதன் மூலம் தேசிய பாடலின் மகிமையைக் குறைத்து மதிப்பிட விரும்புகின்றனர். பாடலை இயற்றிய பங்கிம் பாபு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பது உண்மைதான். ஆனந்த மடமும் வங்கத்தில் இருந்து வந்தது தான்.
ஆனால் வந்தே மாதரம் மேற்கு வங்கம் அல்லது ஒரு நாட்டுக்குள் சுருக்கி வைத்து விட முடியாது. எல்லையில் இருக்கும் ராணுவ வீரரும் சரி, உள்நாட்டில் இருக்கும் ஒரு போலீஸ்காரரும் சரி, தம் இன்னுயிரை தியாகம் செய்யும் போதும் அவர் எழுப்பும் ஒரே முழக்கம் வந்தே மாதரம் மட்டுமே.
இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

