எந்த நிறுவனமாக இருந்தாலும் நடவடிக்கை பாயும்; இண்டிகோ விவகாரத்தில் மத்திய அரசு அறிவிப்பு
எந்த நிறுவனமாக இருந்தாலும் நடவடிக்கை பாயும்; இண்டிகோ விவகாரத்தில் மத்திய அரசு அறிவிப்பு
UPDATED : டிச 09, 2025 01:32 PM
ADDED : டிச 09, 2025 01:02 PM

புதுடில்லி: எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும், பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது. கடுமையான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்று மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய விதிமுறைகளை புறந்தள்ளிய இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. போதிய விமானிகள் இல்லாத சூழலில் விமான சேவைகளை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது.
பார்லிமெண்ட் வரை இண்டிகோ பிரச்னை எழுந்த நிலையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதி அளித்துள்ளார். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முனைப்புடன் இருக்கும் சூழலில் இன்றும் இண்டிகோ விமான நிறுவனம் தமது சேவைகளை ரத்து செய்து அறிவித்துள்ளது.
இன்றும் 200க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்தாகி உள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பெங்களூரு விமான சேவைகள் தான். மொத்தம் 121 விமான சேவைகள் இன்று மட்டுமே ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஹைதராபாத் 58, சென்னை 41 மற்றும் கேரளா 4 என மற்ற மாநில நகரங்களுக்குச் செல்லும் விமான சேவைகளும் ரத்தாகி இருக்கின்றன.
கடந்த செவ்வாய் முதல் நேற்று வரை மட்டுமே 4500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து ரத்து அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே வருவதால் உள்நாட்டு விமான போக்குவரத்தில் அதன் விமான சேவைகளை மத்திய அரசு குறைக்கலாம் என்று பரிசீலித்து வருகிறது.
இதனிடையே, இண்டிகோ விமான சேவைகளில் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு பார்லி.யில் பேசியதாவது;
எந்த விமான நிறுவனமும் சரி, அது எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும் சரி... பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது. கடுமையான, தகுந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டணத்தை திருப்பி தருமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
இதுவரை ரூ.750 கோடி பயணிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகளின் உடமைகள் உரிய முறையில் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டு இருக்கிறதா என்பதையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேசினார்.

