நடுவானில் விமானம் பறக்கும் போது வெடிகுண்டு மிரட்டல்: ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் அச்சம்
நடுவானில் விமானம் பறக்கும் போது வெடிகுண்டு மிரட்டல்: ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் அச்சம்
ADDED : நவ 12, 2025 09:09 PM

மும்பை; ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
மும்பையில் இருந்து வாரணாசிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த மிரட்டல் குறித்து உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விமானம் வாரணாசி விமான நிலையத்தில் அவசரமாக இறக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் இறக்கிவிடப்பட்ட பிறகு, அங்கு ஏற்கனவே தயாராக இருந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு, விமானத்தை சோதனையிட்டது. தீவிர சோதனையில் விமானத்தின் உள்ளே எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வாரணாசி செல்லும் எங்கள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு உதவியுடன் வாரணாசியில் விமானம் தரையிறங்கியவுடன் சோதனை நடத்தப்பட்டது என்றார்.
இதனிடையே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மும்பை, டில்லி, சென்னை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பு சோதனைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

