சிந்து மக்களுக்கு தனி நாடு கோரி பாகிஸ்தானில் போராட்டம்
சிந்து மக்களுக்கு தனி நாடு கோரி பாகிஸ்தானில் போராட்டம்
ADDED : டிச 09, 2025 10:35 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து சிந்து பகுதியை பிரித்து தனி நாடாக ஆக்க வேண்டும் என நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, சிந்து பகுதி பாகிஸ்தானுடன் இணைந்தது. அப்போது, அங்கு வசித்த லட்சக்கணக்கான சிந்தி குடும்பங்கள் இந்தியாவுக்கு வந்து குடியேறின. சிந்து மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாகாணத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. 5.5 கோடி பேர் வசிக்கின்றனர். இம்மாகாணம், பாகிஸ்தானின் 3வது பெரிய மாகாணமாக உள்ளது.
ஆதரவு
இந்நிலையில், சிந்து கலாசார தினத்தை முன்னிட்டு சிந்தி மக்களுக்கு என தனி நாடு கேட்டு கடந்த 7 ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விடுதலை வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர். சிந்து பகுதியில் உள்ள கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தன.
ஆனால், இந்த போராட்டத்தின் போது நடந்த பேரணிக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கூட்டத்தினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதலில் ஐந்து போலீசார் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 45 பேரை கைது செய்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்கள், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும்படி போலீசாருக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கை
இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய அமைப்பானது, சிந்தி பகுதியில் அரசியல் அடக்குமுறை நிலவுகிறது. மனித உரிமை மீறல் அதிகளவில் நடக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு சிந்தி பகுதியை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும். இந்தியா மற்றும் சிந்து பகுதிக்கு இடையிலான கலாசார உறவை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கைக்கு பிரதமர் மோடி ஆதரவு அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளது. சிந்தி பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1967 ல் எழுந்தது. வங்கதேச பிரிவினைக்கு பிறகு 1971 ல் இந்த கோரிக்கை வலுப்பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ' சிந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், நாகரிகத்தின் பார்வையில் அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

