விவசாயிகளிடம் சூரிய மின்சாரம் கொள்முதலுக்கு 'டெண்டர்' கோர அனுமதி
விவசாயிகளிடம் சூரிய மின்சாரம் கொள்முதலுக்கு 'டெண்டர்' கோர அனுமதி
ADDED : நவ 14, 2025 11:28 PM

சென்னை: தமிழக விவசாயிகளிடம் இருந்து, சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, யூனிட்டுக்கு அதிகபட்சமாக, 3.10 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, 'டெண்டர்' கோர, மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள விவசாயிகள், மழை பெய்யாவிட்டால் பாதிக்கப் படுகின்றனர்.
அவர்களுக்கு வேளாண் பொருட்கள் மட்டுமின்றி, மின்சார விற்பனையாலும் வருவாய் கிடைக்க, பிரதமர் உழவர் சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களின் நிலத்தில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம். அதில் கிடைக்கும் மின்சாரத்தை, சொந்த தேவைக்கு பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியங்களுக்கு விற்கலாம்.
தமிழகத்தில், பிரதமரின் திட்டத்தின் கீழ், தனிப்பட்ட விவசாயி, விவசாய குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஆகியோரிடம் இருந்து, 420 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இது, 'டெண்டர்' வாயிலாக வாங்கப்பட உள்ளது.
அதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்துக்கு, அதிகபட்சமாக 3.28 ரூபாய் நிர்ணயம் செய்து, அதை விட குறைந்த விலை கோருபவர்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படும். இதற்காக, 'டெண்டர்' கோர, ஒழுங்குமுறை ஆணையத் திடம், கடந்த ஜூனில் மின் வாரியம் அனுமதி கேட்டது.
ஆனால், கடந்த செப்., 22ம் தேதி அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பால், பசுமை மின் திட்ட சாதனங்களுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அதனால், ஒரு மெகா வாட் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் செலவில், 25 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.
மின் வாரியத்தின் மனுவை விசாரித்த ஆணையம், விவசாயிகளிடம் இருந்து வாங்க உள்ள மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு அதிகபட்சமாக, 3.10 ரூபாய் நிர்ணயம் செய்து, டெண்டர் கோர தற்போது அனுமதி அளித்துள்ளது.

