அக்னி சாட்சியாக நடப்பதே ஹிந்து திருமணம்; பதிவு திருமணம் சட்ட அங்கீகாரம் பெறாது; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அக்னி சாட்சியாக நடப்பதே ஹிந்து திருமணம்; பதிவு திருமணம் சட்ட அங்கீகாரம் பெறாது; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ADDED : ஜூலை 01, 2026 08:02 PM

ஆமதாபாத்: 'ஹிந்து திருமணம் என்பது, அக்னி சாட்சியாக மணமக்கள் ஏழு அடி எடுத்து வைக்கும், 'சப்தபதி' உள்ளிட்ட அத்தியாவசிய சடங்குகள், சம்பிரதாயங்களுடன் நடக்க வேண்டும். அவை ஏதும் இல்லாமல், வெறுமனே பதிவு செய்யப்பட்ட திருமணம் சட்ட அங்கீகாரம் பெறாது' என, குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுஷல் சோனார் என்பவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். ஆமதாபாதில் உள்ள இவரது பெற்றோரை அணுகிய இளம் பெண் ஒருவர், கவுஷலுக்கும், தனக்கும் பதிவு திருமணம் நடந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பிரிட்டனில் உள்ள மகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை கேட்டு, அவரும் அதிர்ச்சி அடைந்து ஆமதாபாதில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'ஹிந்து முறைப்படி திருமணத்தில் நடக்கும் சடங்குகள் ஏதுமின்றி, வெறுமனே பதிவு திருமணம் செய்து கொண்டதாக இளம் பெண் ஒருவர் தன்னை ஏமாற்ற பார்க்கிறார்' என, முறையிட்டார்.
எனினும், 'பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழ் வைத்து இருந்ததால், அதை ரத்து செய்ய முடியாது' என, குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கவுஷல் கோனார் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஹிந்து திருமணச் சட்டம் 7வது பிரிவின்படி, ஹிந்து திருமணம் என்பது வழக்கமான சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக அக்னியை சாட்சியாக வைத்து மணமக்கள் ஏழு அடிகள் எடுத்து வைக்கும், 'சப்தபதி' சடங்கு திருமணத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
மேலும், கணவன் - மனைவி போல, தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளவில்லை என அந்த பெண்ணே ஒப்புக் கொண்டுள்ளார். ஹிந்து முறைப்படி திருமண சடங்குகளும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். வெறுமனே, பதிவு செய்யப்பட்ட திருமணம், ஹிந்து முறைப்படி நடந்த திருமணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
