மும்பையில் ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்: கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது
மும்பையில் ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்: கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது
ADDED : நவ 12, 2025 11:47 PM

மும்பை: வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 11 பேரை, மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது .
மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் தங்கத்தை கடத்தி வந்து, அதை உருக்கி கள்ளச்சந்தையில் ஒரு கும்பல் விற்பனை செய்வதாக, டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநரகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் கடந்த 10ம் தேதி, மும்பையில் ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, சட்டவிரோதமாக தங்கத்தை உருக்கும் இரு ஆலைகள், பதிவு செய்யப்படாத இரு நகைக்கடைகள் செயல்படுவது கண்டறியப்பட்டது.
கள்ளச்சந்தை இது குறித்து, டி.ஆர்.ஐ., அதிகாரி கூறியதாவது:
தங்கக் கடத்தல் கும்பல் ஒன்று வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து, அதை உருக்கி கள்ளச்சந்தையில் விற்பதாக தகவல் கிடைத்தது.
இறக்குமதி விதிகளை மீறியதுடன், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அந்த கும்பலைச் சேர்ந்த 11 பேரை, அதிரடி சோதனை நடத்தி பிடித்துள்ளோம்.
கடத்தி வரப்படும் தங்கத்தை மெழுகு போல் உருக்கியும், தங்கக் கட்டி களாக மாற்றியும் விற்பனை செய்துள்ளனர்.
இவ்வாறு உருக்காலைகளில் உருக்கி வைக்கப்பட்டிருந்த, 11.88 கிலோ எடையுள்ள 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 15.05 கோடி ரூபாய்.
சிண்டிகேட் இத்துடன், 13.17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 8.72 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது. சிண்டிகேட் அமைத்து தங்கக் கடத்தலில் ஈடுபட்ட குழுவுக்கு மூளையாகச் செயல்பட்ட தங்கக் கடத்தல் குற்றவாளியும் கைதாகியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

