லோக்சபாவில் இன்று தொடங்கும் எஸ்ஐஆர் விவாதம்: தொடர்ந்து 10 மணி நேரம் நடத்த ஏற்பாடு
லோக்சபாவில் இன்று தொடங்கும் எஸ்ஐஆர் விவாதம்: தொடர்ந்து 10 மணி நேரம் நடத்த ஏற்பாடு
ADDED : டிச 09, 2025 08:14 AM

புதுடில்லி: தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் பற்றிய விவாதம் பார்லிமெண்ட்டில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 10 மணி நேரம் இந்த விவாதம் நடக்கிறது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி நடத்தி வருகிறது. பீஹாரை தொடர்ந்து, தமிழகம், மேற்கு வங்கம், கேரளா என பல மாநிலங்களில் இந்த எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. டிச.1ம் தேதி பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய போது இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புக் குரலை எழுப்பின.
எதிர்க்கட்சிகளின் தொடர் இடையூறுகளால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட, பார்லிமெண்டை சுமூகமாக நடத்துவது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது டிச.9ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக எஸ்ஐஆர் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று லோக்சபாவில் எஸ்ஐஆர் விவாதம் தொடங்குகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் விவாதம் மொத்தம் 10 மணி நேரம் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் விவாதங்களைத் தொடர்ந்து, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாளை(டிச.10) பதில் அளித்து பேசுவார்.

