ADDED : டிச 10, 2025 01:48 AM

சென்னை: 'நாய்களுக்கு உணவளிக்க பள்ளி மாணவர்களை அனுமதிக்கக் கூடாது' என, பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.
தெருநாய் அச்சுறுத்தல் தொடர்பாக, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில், வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவுறுத்த வேண்டும்.
பள்ளி அறிவிப்பு பலகையிலும், காலை வழிபாட்டுக் கூட்டத்திலும், தெருநாய் அச்சுறுத்தல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தெருநாய் கடித்தால், மாணவர்கள் தயக்கமின்றி ஆசிரியர், பெற்றோரிடம் தெரிவிக்கும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளிகளை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் தெருநாய்களுடன் விளையாடுவது, உணவளிப்பது உள்ளிட்ட செயல்களை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். 'ரேபிஸ்' நோய் தொற்று குறித்து, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள், இதற்காக ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமித்து, பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரித்து, தெருநாய்கள் நுழைய முடியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

