தெரு நாய்களுக்கு 72 காப்பகம் அமைக்க திட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தெரு நாய்களுக்கு 72 காப்பகம் அமைக்க திட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
ADDED : நவ 02, 2025 06:28 AM

தெருநாய்க்கடி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டில்லியில் தெருநாய்க்கடி சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி விசாரணை நடத்தியது.
எதிர்ப்பு இந்த வழக்கில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இணைத்தது. டில்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து, உடனடியாக காப்பகங்களில் அடைக்கவும் உத்தரவிட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில சமூக ஆர்வலர்கள், உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை ஆகஸ்ட் 22ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், தெருநாய்க்கடி பிரச்னையை சமாளிக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கக்கூடிய தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையை மாநில அரசுகள் எந்த அளவிற்கு செய்து வருகின்றன என்பது உள்ளிட்ட விபரங்களை, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் நீதிபதி என்.வி.அஞ்சாரியா அமர்வில், கடந்த 27ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேற்கு வங்கம், தெலுங்கானா, டில்லி மாநகராட்சி தவிர மற்ற மாநில அரசுகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பதை அறிந்த நீதிபதிகள் கோபமடைந்தனர்.
பின், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்களும், 3ம் தேதியான நாளை, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்தனர்.
இந்நிலையில், தெருநாய்க்கடி பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன் விபரம்:
தமிழகத்தில் இதுவரை 4.77 லட்சம், 'ரேபிஸ்' தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்ய, 450 கால்நடை டாக்டர்களுக்கு கால்நடை பல்கலைகள் மூலம், 15 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 500 உதவி டாக்டர்களுக்கும், 500 உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. 25 மாநகராட்சிகளில், நாய்களுக்கான, 86 கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் மட்டும் ஐந்து கருத்தடை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 10 மையங்களை கூடுதலாக உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
450 பேருக்கு பயிற்சி டவுன் பஞ்சாயத்துகளில், 96 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 450 பேருக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தெருநாய்களுக்காக, 72 காப்பகங்கள் உருவாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் நலனுக்காக, 2022- - 23ம் நிதியாண்டு முதல், 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும், 25 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -

