வெளியானது தான்சானியா தேர்தல் முடிவு: அதிபர் சமியா மீண்டும் வெற்றி பெற்றதால் சர்ச்சை
வெளியானது தான்சானியா தேர்தல் முடிவு: அதிபர் சமியா மீண்டும் வெற்றி பெற்றதால் சர்ச்சை
ADDED : நவ 02, 2025 04:08 AM

டோடோமா: தான்சானியா அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் சமியா, 97 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் கட்சியான சி.சி.எம்., எனப்படும், சமா சா மாபிந்துசி கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் சமியா சுலுஹு ஹசன், 97.66 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், முக்கிய எதிர்கட்சிகளான சாடேமா மற்றும் வஸலெண்டோ ஆகியவை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தேர்தல் முடிவுகளை நிராகரித்துள்ளன.
கடந்த அக்டோபர் 29ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் பிரதான எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போட்டியிடுவது தடுக்கப்பட்டது.
குறிப்பாக, சாடேமா கட்சியின் தலைவர் துண்டு லிசு மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார்.
மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான வஸலெண்டோ வேட்பாளரான லுஹாகா எம்பினாவும் தகுதியிழப்பு செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடுவது தடுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்நாட்டின், 16 சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்கொண்டு சவாலற்ற வெற்றியை அதிபர் ஹசன் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
மேலும், 97 சதவீதம் அளவுக்கு ஓட்டு வித்தியாசம் என்பது ஆப்ரிக்க பிராந்தியத்தில் அரிதானது என்றும் கூறப்படுகிறது.
கடந்த, 1961ல் பிரிட்டனிடம் இருந்து தான்சானியா சுதந்திரம் பெற்றது முதல் சி.சி.எம்., கட்சி ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிபர் ஹசன் குறுகிய கால அவகாசத்தில் பதவியேற்பார் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

