'பாகிஸ்தானுடன் உறவு மேம்படாததற்கு முக்கிய காரணம் பயங்கரவாதம்': என்.சி.இ.ஆர்.டி., புதிய பாடத்திட்டத்தில் பதிவு
'பாகிஸ்தானுடன் உறவு மேம்படாததற்கு முக்கிய காரணம் பயங்கரவாதம்': என்.சி.இ.ஆர்.டி., புதிய பாடத்திட்டத்தில் பதிவு
ADDED : டிச 09, 2025 07:42 AM

புதுடில்லி: என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்ட புதிய 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் தான், இந்தியா - பாகிஸ்தான் உறவை முன்னேற்ற விடாமல் தடுக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., ( தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்) வெளியிட்டுள்ள புதிய பாட புத்தகங்களில் சில பாடங்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. அதில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், 'இந்தியா - அண்டை நாடுகளின் உறவு' என்ற பகுதியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதில் பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத தாக்குதல்களால், இந்திய - பாகிஸ்தான் உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையின்மை :
மேலும் இப்பாடத்தில், இந்தியா பலமுறை அமைதி முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் பேச்சுவார்த்தை நடத்த முனைப்பு காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது, இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இப்பாடத்தில் கார்கில் போருக்கு பின்னர் ஏற்பட்ட பதற்றம், எல்லை பாதுகாப்பு சவால்கள் மற்றும் இரு நாடுகளின் உறவின் ஏற்ற தாழ்வுகள் போன்ற விவரங்களும் தரப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கான புத்தகத்தில் பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து விவரித்திருப்பது, அடுத்த தலைமுறைக்கு சரியான புரிதலை வழங்கும் என கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

