ரூ.25,100 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறது வாரியம்
ரூ.25,100 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறது வாரியம்
ADDED : நவ 12, 2025 06:04 AM

சென்னை: தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மூன்று ஆண்டுகளுக்கு தினமும் உச்ச நேரத்தில், 500 மெகா வாட்டும், 24 மணி நேரத்துக்கு, 1,000 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழக மின்தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட் என்றளவில் உள்ளது. அனல் மின் நிலையங்களில் இருந்து சராசரியாக, 3,000 மெகா வாட், நீர் மின் நிலையங்களில், 1,000 மெகா வாட், எரிவாயு மின் நிலையங்களில், 150 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது.
இதனால், மத்திய மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு தினமும் உச்ச நேரத்தில், 500 மெகா வாட் மின்சாரம் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு தினமும், 24 மணி நேரம், 1,000 மெகா வாட் மின்சாரம் தமிழக நிறுவனங்களிடம் வாங்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
காலை 6:00 முதல், 10:00 மணி வரையும், மாலை 6:00 முதல் இரவு, 10:00 மணி வரையும் உச்ச நேரம் எனப்படுகிறது. உச்சநேர மின்சார விலை அதிகம். இதனால், யூனிட்டிற்கு அதிகபட்சம், 8 ரூபாய் விலை வைத்தால் கூட ஒரு நாளைக்கு, 3.20 கோடி ரூபாய் செலவாகும். எனவே, மூன்று ஆண்டுகளுக்கு சராசரியாக, 3,500 கோடி ரூபாய் செலவாகும்.
ஐந்து ஆண்டுகளுக்கு, 1,000 மெகா வாட் வாங்குவதால், 21,600 கோடி ரூபாய் செலவாகும். ஒட்டுமொத்தமாக, 25,100 கோடி ரூபாய்க்கு செலவாகும்.

