போக்சோ குற்றவாளியை விடுவித்தது கோர்ட்: தனி அதிகாரத்தை பயன்படுத்தி சலுகை
போக்சோ குற்றவாளியை விடுவித்தது கோர்ட்: தனி அதிகாரத்தை பயன்படுத்தி சலுகை
ADDED : நவ 02, 2025 12:15 AM

புதுடில்லி: அரசியலமைப்பு சட்டம், 142வது விதியின் கீழ், உச்ச நீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, போக்சோ வழக்கு குற்றவாளியை விடுதலை செய்தது.
சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்ட அந்த நபர், பின்னர் திருமணம் செய்து கொண்டதால், 'இந்த குற்றத்தை காமமாக பார்க்கக்கூடாது; காதலாக கருத வேண்டும்' எனவும் விளக்கம் அளித்துள்ளது.
மேல்முறையீடு நம் நாட்டின் சட்டப்படி விருப்பத்தின்படி உறவு கொள்வது குற்றமல்ல. அதே சமயம் விருப்பத்தின்படி சிறுமியிடம் உறவு கொள்வது போக்சோ சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில், அந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சூழலில், சிறுமி மேஜராக மாறியதும், அந்த நபர் அவரையே திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, 1 வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி அந்த நபர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், போக்சோ சட்டத்தில் இருந்து விடுதலை செய்யுமாறு அந்த நபரின் மனைவி, மாமனார் இருவரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனு மீதான வாதங்கள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அடங்கிய அமர்வு இவ் வழக்கை மிக அரிதானதாக கருதி, தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, அந்நபரை விடுவித்தது.
இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
சில குறிப்பிட்ட வழக்குகளில் முழு நீதி வழங்குவதற்கு என, இந்த நீதிமன்றத்திற்கு அரசமைப்பு சட்டம் தனி அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அநீதியான சூழல்களை தவிர்க்க அந்த அதிகாரம் பயன்படுகிறது.
சட்டத்தின்படி மேல் முறையீட் டாளர் ஒரு கொடூரமான குற்றத்தின் குற்றவாளி என கண்டறியப்பட்ட நிலையில், மனைவிக்கும், அவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை வைத்து தற்போதைய வழக்கை ரத்து செய்வது என்பது இயலாத காரியம்.
அதே சமயம், மேல் முறையீட்டாளர் மனைவி எழுப்பும் இரக்கம் மற்றும் பச்சாதாபத்திற்கான அழுகுரலை புறந்தள்ளுவதும் அநீதியாகவே படுகிறது. மேல்முறையீட்டாளரும், பாதிக்கப்பட்டவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதுடன், இல்லற வாழ்வை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
நடவடிக்கை போக்சோ சட்டத்தின்படி மேல்முறையீட்டாளர் செய்தது கொடுங்குற்றமாக கருதப்படுகிறது. எனினும், அந்த குற்றம் காமத்தால் ஏற்பட்டது அல்ல; அன்பினால் ஏற்பட்டது என்பதை உணர முடிகிறது .
குற்றத்தால் பாதிக்கப்பட்டவரும், அவரது குடும்பத்தினரும், மேல்முறையீட்டாளருடன் அமைதியாக வாழ விருப்பப்படுகின்றனர்.
இந்த சூழலில் மேல்முறையீட்டாளர் மீது குற்றவியல் சட்டத்தின்படி இந்த நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தால், அது ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்க்கவே முடியாத பிரச்னையில் தள்ளிவிடும்.
எனவே, இந்த அம்சங்களை கருதி, அரசமைப்பு சட்டம் 142வது பிரிவு வழங்கிய தனிப்பட்ட அதிகாரத்தை பயன் படுத்தி, மேல்முறையீட்டாளருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கை மற்றும் தண்டனையை ரத்து செய்ய உத்தரவிடுகிறோம்.
அரிதான சூழலில், இப்படியான தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதையும் இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது. எனவே, வேறு எந்தவொரு வழக்கிற்கும் இந்த தீர்ப்பை முன் உதாரணமாக கொள்ளக்கூடாது.
இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

