மூன்று, நான்கு சீட்டுகள் வேண்டாம்: தமிழகத்தை ஆள்வதே இலக்கு: சீமான்
மூன்று, நான்கு சீட்டுகள் வேண்டாம்: தமிழகத்தை ஆள்வதே இலக்கு: சீமான்
ADDED : நவ 02, 2025 04:11 AM

சென்னை: சென்னை அம்பத்துாரில், நா.த.க., சார்பில், 'தமிழ்நாடு நாள்' பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
இதில், நா.த.க., தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் பேசியதாவது:
மற்ற மாநிலங்கள் அரசு விழாவாக, அம்மாநிலங்கள் பிறந்த நாளை, பிரிந்த நாளை கொண்டாடுகின்றன. ஆனால், இங்கு கொண்டாடப்படுவதில்லை. திராவிடர்கள் வரலாற்றை திரிப்பர் அல்லது மறைப்பர் என்பதற்கு இது சான்று.
பிறந்த நாளை கொண்டாடாதவர்கள், பெயர் வைத்த நாளை கொண்டாடுவது பைத்தியக்காரத்தனம். திராவிடம் என்பது பிரிவு மற்றும் ஏமாற்று என்பதற்கு எடுத்துக்காட்டு.
இந்த ஆட்சி, அதிகாரம் யாருக்கானது என, எண்ணி தெளிய வேண்டும். தமிழகத்தில் எந்த வரலாற்று சுவடும் இருக்கக்கூடாது என, திராவிடரும், இந்தியர்களும் ஒழித்தனர்.
விரைவிலேயே அரசு விழாவாக, நவ., 1ம் தேதி, தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும். அதை சாதித்து காட்டுவோம்.
கூட்டணி வைத்தால், மூன்று, நான்கு சீட் கிடைக்கும். எங்களுக்கு வேண்டியது சீட் அல்ல. தமிழகத்தை கைப்பற்றுவோம். அதற்கு பொறுமை வேண்டும். கூட்டணிக்காக காலில் விழுந்து கிடக்க முடியாது. நாம் பதறாமல், தடுமாறாமல் இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இருப்போம்.
இங்கு நான் என்ன பேசுகிறேன்; அதை உள்வாங்கி தான் கைத்தட்டுவர். ஆனால், அங்கே ஆரம்பத்தில் இருந்தே கத்துவர்; அவனும் கத்துவான்; ஒன்றும் புரியாது.
இந்நாட்டில் ஈ.வெ.ரா.,வும் கருணாநிதியும் தான். மற்ற தலைவர்கள் பெயர்கள் இருந்தால் மாற்றி விடுவர். தமிழர்கள் நாய். ஏன் நாய் என்றால், தெலுங்கன், கன்னடன் யார் வந்தாலும் அரிசி கொடுத்து விடுவர். ஆனால், தமிழன் வந்தால், குறுக்கே படுத்து விடுவர். இதனால் தான் தமிழனை நாய் என்கிறோம்.
திரை கலைஞர்களை பாராட்டுவோம். ஆனால், நாட்டை ஆள தகுதியும் அறிவும் வேண்டும். நான் சிறையில் இருந்து கட்சி ஆரம்பித்தேன். வந்ததும் முதல்வர் என கூறவில்லை. நான்கு முறை தோற்றாலும், ஐந்தாவது முறை தனித்து போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

