உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஆட்களை கடத்திய முக்கிய குற்றவாளி கைது
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஆட்களை கடத்திய முக்கிய குற்றவாளி கைது
ADDED : நவ 15, 2025 12:35 AM

கொச்சி: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஈரானுக்கு ஆட்களை கடத்திய வழக்கில், முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கேரளாவில் கைது செய்தனர்.
கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில், கடந்த ஆண்டு மே 18ல் குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உடல் உறுப்பு கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடையதாக சந்தேகத்துக்குரிய இளைஞரை போலீசார் பிடித்தனர்.
அவரை எர்ணாகுளம் ஊரக போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
அவரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மிக ஏழ்மை நிலையில் உள்ள நபர்களை குறிவைத்து, அவர்களுக்கு பணம் தருவதாக ஆசை காட்டி மேற்காசிய நாடான ஈரானுக்கு கடத்தி சென்றுது தெரியவந்தது.
பின்னர் சட்டப்பூர்வமான உறுப்பு தானம் என்ற பெயரில், அவர்களது உடல் உறுப்புகளை திருடி, தேவைப்படும் நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அவற்றை பொருத்தியும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான எர்ணாகுளத்தை சேர்ந்த மது ஜெயக்குமார், கடந்த 8ம் தேதி ஈரானில் இருந்து திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மதுவை வரும் 19ம் தேதி வரை தேசிய புலனாய்வு அமைப்பினர் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்துள்ளது.
தற்போது கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில் அதிகாரிகள் அவரிடம் விசாரிக்கின்றனர்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு மது, சபீத், சஜீத் சியாம், பெல்லகோண்டா ராம் பிரசாத் ஆகியோர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

