தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தனி தமிழகம் என பேசுவோர் இனி மனநலம் பாதித்தவரே: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

 தனி தமிழகம் என பேசுவோர் இனி மனநலம் பாதித்தவரே: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

 தனி தமிழகம் என பேசுவோர் இனி மனநலம் பாதித்தவரே: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

34


ADDED : ஜூலை 05, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

34

ADDED : ஜூலை 05, 2026 03:38 AM


34
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தை தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்ற கருத்து தெரிவிப்பவர்களை, மனநல பிரச்னை உள்ளவர்களாகவே, மக்கள் பார்ப்பர்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இளங்கோவன் என்பவர் எழுதிய, 'தமிழ் தேசிய தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்' என்ற புத்தகம், கடந்த 2014ல், சென்னை வடபழனியில், வெளியிடப்பட்டது.

கடந்த 1967ல் கோவையில், 'தமிழகம் தனி நாடாக வேண்டும்' என, தமிழரசன் பேசிய பேச்சு மற்றும் 'பிரிவினைக்காக கொரில்லா போர் முறை கையாளப்பட வேண்டும்' என்பது போன்ற தகவல்கள், இப்புத்தகத்தில் இடம் பெற்றன.

இதையடுத்து, புத்தகத்தை வெளியிட்ட 'கழகம்' பதிப்பகத்தை நடத்திய இளங்கோவன், சென்னை கே.கே.நகரை சேர்ந்த கீரா, சாலிகிராமத்தை சேர்ந்த தமிழ் பாலா ஆகியோர் மீது, போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், கீரா மற்றும் தமிழ் பாலா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது, இளங்கோவன் இறந்து விட்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:

சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தியை ஏற்படுத்தும் எழுத்து அல்லது அடையாள வடிவிலான செயல்பாடே தேச துரோகத்தின் சாராம்சம். அத்தகைய குற்றச்சாட்டுகளை, இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்பவே அணுக வேண்டும்.

கடந்த 1967ல் தமிழரசன், தமிழ் விடுதலை படையை உருவாக்கியபோது, அத்தகைய பேச்சு அல்லது வெளியீடு, இந்திய அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பையோ அல்லது அவமதிப்பையோ ஏற்படுத்தியிருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், இன்றைய சூழலில், இந்தியா ஒரு தேசமாகவும், உள்ளத்தாலும் ஆன்மாவாலும் ஒருங்கிணைந்து கிடக்கிறது.

இன்றைய சூழலில், யாராவது தமிழகம் தனி நாடாகப் பிரிய வேண்டும் என்று பேசினால், அந்த நபருக்கு மனநலம் சரியில்லை என்று தான் பொது மக்கள் கருதுவர்.

இது பொது மக்களிடையே எந்த விதமான வெறுப்பையும் ஏற்படுத்தாது. அந்தப் புத்தகத்தில், தற்காலத்தில் பிரிவினைக்கான அழைப்பு எதுவும் இல்லை.

பல தசாப்தங்களுக்கு முன் தமிழரசன் கூறியதை மட்டுமே, அது பதிவு செய்துள்ளது. நடந்ததை வெறும் பதிவு செய்வது வெறுப்பைத் துாண்டும் முயற்சியாகாது என்பதால், தேச துரோக வழக்கை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us