டில்லி குண்டுவெடிப்புக்கு துருக்கியில் பிளான்: என்ஐஏ விசாரணையில் 'திடுக்' தகவல்
டில்லி குண்டுவெடிப்புக்கு துருக்கியில் பிளான்: என்ஐஏ விசாரணையில் 'திடுக்' தகவல்
UPDATED : நவ 12, 2025 03:59 PM
ADDED : நவ 12, 2025 03:55 PM

புதுடில்லி: 12 பேரை பலி கொண்ட டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கான திட்டம் துருக்கியில் தீட்டப்பட்டு இருக்கலாம் என்பது என்ஐஏ புலனாய்வு விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
தலைநகர் டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து என்ஐஏ தமது அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக, இந்த திட்டம் எங்கே தீட்டப்பட்டது, திட்டமிடலில் ஈடுபட்டவர்களின் தகவல் தொடர்புகள் எப்படி இருந்தது என்பது பற்றிய விசாரணையில் என்ஐஏ இறங்கியது.
இதில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் வருமாறு;
குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், 2 டெலிகிராம் குழுக்கள் மூலம் தகவல் பரிமாற்றம் நடத்தி இருக்கின்றனர். இந்த தகவல் தொடர்பு தான் அவர்களின் திட்டமிடலில் முக்கிய புள்ளியாக இருந்துள்ளது.
பர்சான்தான்-இ-தாருல் உலும் மற்றும் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் கமாண்டர் உமர் பின் கட்டாப் நடத்தி வரும் மற்றொரு டெலிகிராம் குழுக்கள் இடையே நடைபெற்ற உரையாடல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
இந்த இரு டெலிகிராம் குழுக்களில் ஏதேனும் ஒரு குழு மூலம் பயங்கரவாதி டாக்டர் உமர் நபி, சோபியானைச் சேர்ந்த இமான் இர்பான் அகமது வாஹா ஆகிய இருவரும் தகவல்களை பரிமாறி இருக்கின்றனர்.
காஷ்மீர் ஆசாதி மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற இரு புள்ளிகளை மையப்படுத்தி தான் உரையாடல்கள் தொடங்கி, பின்னர் சர்வதேச பயங்கரவாதம், உலகளாவிய ஜிகாத் மற்றும் பழிவாங்குவது என்ற செயல்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த டெலிகிராம் குழுக்கள் மூலம் உரையாடிய பயங்கரவாதிகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். அங்கு சில நபர்களை சந்தித்தும் இருக்கின்றனர். இதில் குறிப்பாக அவர்களின் துருக்கி பயணமே டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற வேண்டும் என்ற முக்கிய புள்ளியாக இருந்திருக்கலாம் கருதப்படுகிறது.
துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பின்னரே, இந்த குழுவினர், தங்களின் பயங்கரவாத நெட்வொர்க்கை விரிவுபடுத்தி உள்ளனர். டாக்டர் முசாம்மில் பரிதாபாதில் உள்ள அல்பலா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளான். மற்றொரு டாக்டர் அடில் சஹாரன்பூரில் பணியமர்த்தப்பட்டான்.
மற்ற பயங்கரவாதிகள், ஆட்களைச் சேர்த்தல், பயங்கரவாத சம்பவங்களுக்கு தேவையான தளவாடங்களை வெவ்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளனர். இந்த செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் என்ஐஏ குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
டில்லி குண்டுவெடிப்பை அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்படும் டாக்டர்கள் உமர், முசாமில், ஷாஹீன் ஆகியோருடன் சேர்ந்து 5 முதல் 6 மருத்துவர்கள் உள்பட 9 முதல் 10 பேர் கொண்ட பயங்கரவாத நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர். இந்த 3 பேரும், தங்கள் தொழிலான டாக்டர் என்ற அடையாளத்தை கொண்டு, வெடிபொருட்களை வாங்கி ஒன்று சேர்த்துள்ளனர்.
இவ்வாறு என்ஐஏ விசாரணையில் புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன. டில்லி குண்டுவெடிப்பு விசாரணை துருக்கி வரை நீண்டுள்ள உள்ள அதே தருணத்தில் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த நாளில் மதியம் 3 மணி முதல் மாலை 6.30 மணி வரை டாக்டர் உமர் யாரை தொடர்பு கொண்டான் என்பதை கண்டறிய செங்கோட்டை பகுதியில் உள்ள செல்போன் டவரை என்ஐஏ அதிகாரிகள் குழு ஆராய்ந்து வருகின்றனர்.

