எங்களை சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம்: பாக்., முப்படை தளபதி அசிம் முனீர் 'காமெடி'
எங்களை சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம்: பாக்., முப்படை தளபதி அசிம் முனீர் 'காமெடி'
ADDED : டிச 10, 2025 01:20 AM

இஸ்லாமாபாத்: ''இந்தியா எங்களை சீண்டினால் நாங்கள் முன்பு போல சும்மா இருக்க மாட்டோம்,'' என, பாகிஸ்தானின் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்ற அசிம் முனீர் பேசி உள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். இவரை, பாக்., முப்படை தலைமை தளபதியாக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
பொய்
நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள இவர், அவ்வப்போது நம் நாட்டை மிரட்டும் வகையில், 'காமெடி' செய்து வருகிறார். தற்போது முப்படைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு கிடைத்துள்ளதால், இன்னும் அதிகமாக உளறி வருகிறார். 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்திலும் வாய்க்கு வந்தபடி கூச்சமே இல்லாமல் அசிம் முனீர் பொய் பேசினார். நம் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக மார் தட்டினார். கடைசியில் அவர் கூறியது அனைத்தும், பொய் என நிரூபிக்கப்பட்டது.
அசிம் முனீரின் கதைகளை நம்பிய பாக்., அரசு, அவரை பெருமைப்படுத்தும் விதமாக, அரசியலமைப்பு சட்டத்தையே திருத்தி, முப்படை தலைமை தளபதி என்ற பொறுப்பை வழங்கியது. இதன் மூலம், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் அதிகாரத்துடன், அணு ஆயுத அமைப்புகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவருக்கு கிடைத்துள்ளது.
அச்சுறுத்தல்
பாகிஸ்தானின் முப்படை தலைமை தளபதியாக பதவியேற்ற பின், அந்நாட்டு அதிகாரி களிடையே அசிம் முனீர் ஆற்றிய உரை: புதிதாக அமைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் தலைமையகம் வரலாற்று சிறப்புமிக்கது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கம்.
வளர்ந்து வரும் மற்றும் மாறி வரும் அச்சுறுத்தல்களை கருதி, முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது காலத்தின் தேவை . தற்போதைய போர்க்களம், நவீன போர்க்களமாக மாறியுள்ளது. எனவே, புதிய தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு படைகளும் மாற வேண்டியது அவசியம்.
எதிர் காலத்தில் இந்தியாவால் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடந்தாலும், அதற்கு பாக்., அளிக்கும் பதில் முன்பை விட மிகவும் வேகமாகவும், தீவிரமாகவும் இருக்கும். இந்தியா எந்தவொரு தவறான எண்ணத்திற்கோ அல்லது அனுமானத்திற்கோ பலியாகிவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்ததுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, தடை செய்யப்பட்ட டி.டி.பி., எனப்படும், தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழுவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

