பீஹாரில் கிடைத்தது அமோக வெற்றி; பாஜவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்!
பீஹாரில் கிடைத்தது அமோக வெற்றி; பாஜவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்!
ADDED : நவ 14, 2025 01:11 PM

புதுடில்லி: பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றியை நோக்கி உள்ள நிலையில், அடுத்ததாக தங்களின் இலக்கு மேற்கு வங்கம் தான் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
243 தொகுதிகளைக் கொண்ட பீஹார் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜ மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார முன்னிலை பெற்றுள்ளது. இதுவரையில் 197 இடங்கள் முன்னிலை வகித்துள்ள நிலையில், பாஜ 88 இடங்களிலும், ஜேடியு 79 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மஹாகட்பந்தன் கூட்டணி வெறும் 41 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், பீஹாரைத் தொடர்ந்து மேற்கு வங்கம் தான் தங்களின் அடுத்த இலக்கு என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது; பீஹார் இளைஞர்கள் மிகவும் புத்திசாலியானவர்கள். அராஜகமான அரசை அமைக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். நாங்கள் (தேஜ கூட்டணி) பீஹாரில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்ததாக எங்களின் இலக்கு மேற்கு வங்கம் தான். பீஹாருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, ஊழல் மற்றும் கொள்ளையடிக்கும் அரசை மக்கள் ஏற்கவில்லை. அமைதி, நீதி மற்றும் வளர்ச்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
இன்றைய இளைஞர்கள் அந்த காலத்தை (லாலு ஆட்சி) நேரடியாகக் பார்க்காவிட்டாலும், அவர்களின் முன்னோர்கள் அதனை கண்டுள்ளனர். பீஹார் அரசில் தேஜஸ்வி யாதவ் குறுகிய காலமே இருந்த போதும், அவர் மேற்கொண்ட குழப்பத்தைப் பரப்பும் முயற்சிகளை மக்கள் பார்த்துள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.

