கன்னட நட்சத்திர தம்பதியிடம் மோசடி செய்த வாலிபர் கைது
கன்னட நட்சத்திர தம்பதியிடம் மோசடி செய்த வாலிபர் கைது
ADDED : நவ 12, 2025 11:55 PM

பெங்களூரு: கன்னட திரைப்பட இயக்குநரும், நடிகருமான உபேந்திரா, அவரது மனைவி பிரியங்கா, அவர்களின் மேலாளர் ஆகியோரின் மொபைல் போனை 'ஹேக்' செய்த பீஹார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னட திரைப்பட நடிகை பிரியங்கா. இவரது கணவர் உபேந்திரா. இவர் இயக்குநராகவும், நடிகராகவும் உள்ளார்.
கடந்த செப்., 15ம் தேதி பிரியங்காவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், 'உங்கள் ஆர்டர் டெலிவரி செய்ய வேண்டும். முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் கொடுக்கும் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, உறுதிப்படுத்தினால், டெலிவரி செய்வோம்' என கூறியுள்ளார்.
இதை நம்பி, பிரியங்காவும், அந்த எண்ணுக்கு டயல் செய்தார். டயல் செய்தவுடன், அவரது மொபைல் போன் முடங்கியது. அவரோ, மொபைல் போனில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து, தன் மேலாளர் மகாதேவ் மொபைல் போனை வாங்கி, அதே எண்ணை மீண்டும், 'டயல்' செய்தார். அவரின் மொபைலும் முடங்கியது. பின், தன் கணவர் உபேந்திராவின் போனை பெற்று, 'டயல்' செய்தார். அதுவும் 'ஹேங்' ஆனது.
இதற்கிடையில், மொபைல் போன்களை 'ஹேக்' செய்த மர்ம நபர், இவர்களின் 'வாட்ஸாப்' கணக்கில் இருந்து, 'எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது' என, இவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.
இதை பார்த்த தம்பதியின் மகன் உட்பட நான்கு பேர், 1.65 லட்சம் ரூபாயை, 'வாட்ஸாப்'பில் மர்ம நபர் குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினர். மொபைல் போன்கள் 'ஹேக்' செய்யப்பட்டதை தாமதமாக அறிந்து அதிர்ச்சி அடைந்த தம்பதி, உடனடியாக சதாசிவ நகர் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது, பீஹார் மாநிலம், தஸ்ரத்பூரை சேர்ந்த விகாஸ் குமார், 22, என்ற இளைஞரை கைது செய்தனர். அவரை பெங்களூரு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து பணம் மீட்கப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், இவரை போன்று, 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இதுபோன்று, 'ஆன்லைன்' மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

