பீஹார் சட்டசபை தேர்தலில் பூஜ்யம்; பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த ஏமாற்றம்!
பீஹார் சட்டசபை தேர்தலில் பூஜ்யம்; பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த ஏமாற்றம்!
UPDATED : நவ 14, 2025 02:09 PM
ADDED : நவ 14, 2025 12:15 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் 238 இடங்களில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. இது அவரது கட்சியினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தலில் கருத்துக்கணிப்புகளில் சொன்னதை விட கூடுதல் தொகுதிகளில் தேஜ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 243 இடங்களில் 200க்கு மேற்பட்ட இடங்களில் பாஜ, ஜேடியு கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் 76 இடங்கள் வரை முன்னிலையில் இருந்த ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி, அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து, தற்போது 37 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் தேஜ கூட்டணி, மஹாகட்பந்தன் கூட்டணியை கடந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவரது கட்சி 238 தொகுதிகளில் தனித்து களம் கண்டது. சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட இவரது கட்சி, தேஜ கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு தகுந்தபடி மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் கிலோமீட்டர் பேரணி சென்று பிரசாரத்தை செய்தார் பிரசாந்த் கிஷோர். செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டமும் கூடியது.இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார் அவர். ஆனால், இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் ஜன் சுராஜ் கட்சி முன்னிலை பெறாதது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூட பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு 2 முதல் 4 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அதுவும் கிடைக்காமல் போனது.இந்தத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்று பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருந்தார்.
தற்போது, நிதிஷ் குமாரின் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலத்தை நிதிஷ்குமார் முடித்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

