உங்களை நேசிப்போரை கட்டுப்படுத்துங்கள்: அண்ணாமலைக்கு பாஜ 'அட்வைஸ்'
உங்களை நேசிப்போரை கட்டுப்படுத்துங்கள்: அண்ணாமலைக்கு பாஜ 'அட்வைஸ்'
ADDED : ஜூலை 07, 2026 05:19 AM

சென்னை: 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலைக்கு, தமிழக பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு தலைவர் அர்ஜுன மூர்த்தி எழுதிய கடிதம்:
தங்களை நேசிக்கும் சிலரும், தங்களை எதிர்ப்பவர்களும், சமூக ஊடகங்களை தனி மனித தாக்குதல்களின் போர்க்களமாக மாற்றி வருவது, மிகுந்த கவலை அளிக்கிறது. மற்ற தலைவர்களை அவமதிப்பதும், பெண்களை இழிவுபடுத்துவதும், தரக்குறைவான சொற்களால் தாக்குவதும் நாகரிக சமூகத்துக்கு அடையாளமாக இருக்க முடியாது.
ஒரு தலைமையை உயர்த்த, இன்னொரு தலைவரை இழிவுபடுத்த வேண்டிய அவசியம், எந்த ஜனநாயகத்திலும் இல்லை. பெண்களையும், மூத்த தலைவர்களையும் கேவலமாக சித்தரிக்கும் படங்கள், படிக்கவே கூச்சப்பட வேண்டிய மொழி ஆகியவை, சாதாரண அரசியல் வெளிப்பாடாக மாறி வருவது கவலை அளிக்கிறது.
கருத்தை எதிர்க்கலாம், மனிதனை அல்ல; விமர்சிக்கலாம், அவமதிக்கக்கூடாது; வாதிடலாம், வெறுப்பை விதைக்கக் கூடாது. தங்களை நம்பி பயணிக்கும் அனைவரிடமும், இதை சொல்லுங்கள்.
இந்த கடிதம், வேண்டுகோள் மட்டுமல்ல; பொறுப்புணர்வின் முறையீடு. நாட்டை மாற்ற விரும்பும் தலைமை, முதலில் தங்களை பின்பற்றுவோரின் அரசியல் பண்பாட்டை மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
