பழங்குடியினரின் கல்வி அடையாளத்தை பாதுகாக்க அசாமில் கலாசார போர்
பழங்குடியினரின் கல்வி அடையாளத்தை பாதுகாக்க அசாமில் கலாசார போர்
ADDED : டிச 01, 2025 11:47 PM

அசாமில், பல ஆண்டு காலமாக தேயிலை தோட்ட பழங்குடியினருக்கு கல்வி அளித்து வந்த கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகள், மத மாற்றத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அவர்களின் கல்வி உரிமைகளை பாதுகாக்க கலாசார போர் நடக்கிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பழங்குடியினரின் குழந்தைகளுக்கு, பல ஆண்டு காலமாக கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகள் கல்வி அளிக்கின்றன.
சர்ச்சை
உள்ளூர் சமூகங்களால், வெளியாட்கள், தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்பட்ட தேயிலை தோட்ட பழங்குடியினருக்கு கல்வி அளித்து, அவர்களின் வாழ்க்கை முறையையே கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகள் மாற்றி அமைத்துள்ளன.
தரமான ஆங்கில வழிக் கல்வியை வழங்கும் இப்பள்ளிகள், சமூக - -பொருளாதார முன்னேற்றத்திற்கான மறுக்க முடியாத பாதையாக மாறின. கிறிஸ்துவ மிஷனரி பள்ளியில் படிப்பது என்பது, தேயிலை தோட்ட பழங்குடியினருக்கு மிகவும் கவுரவமாக இருக்கிறது.
இந்நிலையில், இந்த கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகள், தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளன. அதாவது, பள்ளிகளில் படிக்கும் பழங்குடியினரின் குழந்தைகள், வலுக்கட்டாயமாக, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். அரசு நிதியுதவி பெறும் மிஷனரி பள்ளிகளிலிருந்து கிறிஸ்துவ மத சின்னங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தேயிலை தோட்ட பழங்குடியினரின் கல்வி அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில், 'அசாம் ஹிந்துத்துவ பள்ளி' என்ற பெயரில், கலாசாரத்தை மையமாகக் கொண்ட புதிய பள்ளிகளை நிறுவுவதில், ஹிந்து அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்ற ன.
விருப்பம்
இந்த புதிய பள்ளிகள் வெறும் கல்வி போட்டியாளர்கள் மட்டுமல்ல; அவை கலாசார மீட்பு மையங்களாகும். இவை நவீன பாடங்களுடன் சமஸ்கிருதம், பகவத் கீதை போன்றவற்றை கற்பிக்கின்றன. பழங்குடியினரின் வரலாற்று ரீதியான மற்றும் ஒருங்கிணைந்த ஹிந்து அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில், இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
'பள்ளிகளில் மத பிரசாரத்தை நிறுத்துங்கள்; பாரதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் சகித்துக் கொள்ளப்படாது' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அசாமில் முளைத்துள்ளன. இந்த போராட்டத்தில் என்ன நடந்தாலும், தங்கள் குழந்தைகளின் எதிர் காலம் சிறக்க வேண்டும் என்பதே பழங்குடியின மக்களின் விருப்பமாக உள்ளது
- நமது சிறப்பு நிருபர் -

